மும்பையை சேர்ந்த பாயல் கபாடியா இயக்கிய படம், ‘ஆல் வி இமேஜின் அஸ் லைட்’. இதில் கனி குஸ்ருதி, திவ்யா பிரபா, சாயா கதம், ஹ்ருது ஹாரூண் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
இந்தப் படம் 77-வது கேன்ஸ் திரைப்பட விழாவில் கிராண்ட் பிரி விருதைப் பெற்று சாதனைப் படைத்தது. இதைத் தொடர்ந்து கோல்டன் குளோப் விருதுக்கு, சிறந்த இயக்குநர், சிறந்த வெளிநாட்டுத் திரைப்படம் ஆகிய பிரிவுகளில் பரிந்துரைக்கப்பட்டது.
இந்திய இயக்குநர் ஒருவர், கோல்டன் குளோப் விருதின் சிறந்த இயக்குநர் பிரிவுக்குப் பரிந்துரைக்கப்பட்டது இதுதான் முதல்முறை என்பதால் அதிக எதிர்பார்ப்பு இருந்தது. இந்த விருது விழா லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள பிரேவரி ஹில்டன் ஓட்டலில் இந்திய நேரப்படி நேற்று காலை 6.30-க்கு தொடங்கியது.
இதில், சிறந்த இயக்குநர், சிறந்த வெளிநாட்டு திரைப்படம் ஆகிய இரண்டு பிரிவுகளிலும் இந்தப் படத்துக்கு விருது கிடைக்கவில்லை. சிறந்த இயக்குநர் விருது ‘த புருட்டலிஸ்ட்’ (The Brutalist) என்ற படத்தை இயக்கிய பிராடி கோர்பெட்டுக்கும் சிறந்த வெளிநாட்டுப் படத்துக்கான விருது எமிலியா பெரேஸ் (Emilia Prez) என்ற ஸ்பானிஷ் படத்துக்கும் கிடைத்தது. இருந்தாலும் இந்தியாவுக்குப் பெருமை சேர்த்த தாக சமூக வலை தளங்களில் பாயல் கபாடியாவை பாராட்டி வருகின்றனர்.














