இங்கிலாந்து அணிக்கு எதிரான இருதரப்பு டி20 தொடரில் இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளரான ஜஸ்பிரீத் பும்ராவுக்கு ஓய்வு வழங்கப்படக்கூடும் என தகவல்கள் வெளியாகி உள்ளது.
இங்கிலாந்து கிரிக்கெட் அணி அடுத்த வாரம் இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கு 5 ஆட்டங்கள் கொண்ட டி 20 தொடர் மற்றும் 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் போட்டித் தொடரில் விளையாடுகிறது. இதில் டி20 தொடர் முதலில் நடைபெறுகிறது. இதன் முதல் ஆட்டம் வரும் 22-ம் தேதி கொல்கத்தாவில் நடைபெறுகிறது. இந்நிலையில் இந்தத் தொடரில் இந்திய அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளரான ஜஸ்பிரீத் பும்ராவுக்கு ஓய்வு கொடுக்கப்படக்கூடும் என தகவல்கள் வெளியாகி உள்ளன.
ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சிட்னியில் நடைபெற்ற கடைசி டெஸ்ட் போட்டியில் பும்ராவுக்கு முதுகு பகுதியில் காயம் ஏற்பட்டது. இதனால் அவர், 2-வது இன்னிங்ஸில் பந்து வீசவில்லை. இது இந்திய அணிக்கு பாதகமாக அமைந்தது. டெஸ்ட் தொடரை இந்திய அணி 1-3 என இழந்த போதிலும் 32 விக்கெட்களை வேட்டையாடிய பும்ரா தொடர் நாயகனாக தேர்வாகி இருந்தார். இந்தத் தொடரில் அவர், 150-க்கும் மேற்பட்ட ஓவர்களை வீசியிருந்தார். பணிச்சுமை காரணமாக அவருக்கு காயம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
மேலும் வரும் பிப்ரவரி மாதம் 19-ம் ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடர் தொடங்குகிறது. இதனை கருத்தில் கொண்டு இங்கிலாந்துக்கு எதிரான இருதரப்பு டி20 தொடரில் பும்ராவுக்கு ஓய்வு கொடுக்கப்படக்கூடும்.
இது ஒருபுறம் இருக்க பும்ராவின் காயம் எப்படி இருக்கிறதென இன்னும் முழுமையாக கண்டறியப்படவில்லை என கூறப்படுகிறது. பும்ராவுக்கு ஏற்பட்ட காயம் கிரேட் 1 எனில் குணமடைவதற்கு குறைந்தபட்சம் 2 அல்லது 3 வாரங்கள் தேவைப்படும். கிரேடு 2 காயம் எனில் அது குணமாக 6 வாரங்களும் கிரேடு 3 எனில் குறைந்தபட்சம் 3 மாதங்கள் தேவைப்படும் என்றும் மருத்துவ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதனால் காயத்தின் தன்மை தெரியவந்த பிறகுதான் டி 20 தொடரை அடுத்தது நடைபெற உள்ள 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் போட்டித் தொடரில் பும்ரா விளையாடுகிறாரா என்பது தெரியவரும். இருப்பினும் உடற்தகுதியை சரிபார்க்கும் வகையில் பிப்ரவரி 12-ம் தேதி அகமதாபாத்தில் நடைபெறும் இங்கிலாந்துக்கு எதிரான கடைசி மற்றும் 3-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் பும்ரா விளையாடக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஒருநாள் போட்டித் தொடர் பிப்ரவரி 6-ம் தேதி நாக்பூரில் தொடங்குகிறது.














