பெண் குழந்தைகளின் பெற்றோருக்கு பள்ளி, வணிக நிறுவனங்கள் மற்றும் தனியார் மருத்துவமனைகளில் 20 சதவீத தள்ளுபடி வழங்கும் திட்டத்தை மத்திய பிரதேசத்தின் ஹர்தா மாவட்ட நிர்வாகம் அமல்படுத்தி உள்ளது.
மத்திய பிரதேசத்தில் 1,000 ஆண்களுக்கு 933 பெண்கள் உள்ளனர். அந்த மாநிலத்தின் ஹர்தா மாவட்டத்தில் 1,000 ஆண்களுக்கு 894 பெண்கள் மட்டுமே உள்ளனர். கருவில் இருக்கும் குழந்தைகளை முன்கூட்டியே கண்டறிந்து, பெண் சிசுவை அழிக்கும் சம்பவங்கள் ஹர்தா மாவட்டத்தில் அதிகரித்து வருவதாகக் கூறப்படுகிறது. இந்த சமூக அவலத்துக்கு முற்றுப்புள்ளி வைக்க ஹர்தா மாவட்ட ஆட்சியர் ஆதித்ய பிரதாப் சிங் கடந்த 1-ம் தேதி முதல் புதிய திட்டத்தை அமல்படுத்தி உள்ளார்.
இதன்படி ஹர்தா மாவட்டத்தில் பெண் வாரிசுகள் மட்டுமே உள்ள பெற்றோருக்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் பார்கோடு வசதியுடன்கூடிய அட்டை வழங்கப்பட்டு வருகிறது. இந்த அட்டையை பயன்படுத்தி தனியார் பள்ளிகள், மளிகை கடைகள் உள்ளிட்ட வணிக நிறுவனங்கள் மற்றும் தனியார் மருத்துவமனைகளில் 20 சதவீத தள்ளுபடியை பெறலாம். இதுவரை 638 பெற்றோர் புதிய திட்டத்தில் இணைந்துள்ளனர்.
இதுகுறித்து ஹர்தா மாவட்ட ஆட்சியர் ஆதித்ய பிரதாப் சிங் கூறியதாவது: பெண் வாரிசுகள் மட்டுமே கொண்ட பெற்றோரை கவுரப்படுத்தும் வகையில் ரேவா சக்தி என்ற பெயரில் புதிய திட்டத்தை ஹர்தா மாவட்டத்தில் அமல்படுத்தி உள்ளோம். இதுதொடர்பாக பள்ளிகள், மருத்துவமனைகள், வணிக நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினோம். அனைத்து தரப்பினரும் பெண் வாரிசுகள் கொண்ட பெற்றோருக்கு 20 சதவீத தள்ளுபடி வழங்க ஒப்புக் கொண்டனர். சில பள்ளிகள், மருத்துவமனைகள் 100 சதவீத தள்ளுபடி வழங்க முன்வந்துள்ளன.
அரசு தரப்பிலும் சில சலுகைகள் அமல் செய்யப்பட்டு உள்ளன. இதன்படி பெண் வாரிசுகள் கொண்ட பெற்றோர் அரசு அலுவலகங்களில் வரிசையில் காத்திருக்க வேண்டிய அவசியமில்லை. அவர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் அரசு சேவைகள் வழங்கப்படும். இவ்வாறு மாவட்ட ஆட்சியர் ஆதித்ய பிரதாப் சிங் தெரிவித்துள்ளார்.
பெண் குழந்தைகளை பாதுகாக்கும் ஹர்தா மாவட்ட நிர்வாகத்தின் புதிய திட்டத்துக்கு சமூக வலைதளங்களில் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.














