மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில், சம்பந்தப்பட்ட அந்த சார் யார்? என்பதை திமுக ஏன் மூடி மறைக்கிறது என மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் கேள்வி எழுப்பியுள்ளார். கார் வியாபாரிகள் சங்கத்தின் 9-ம் ஆண்டு விழா தி.நகரில் நேற்று நடைபெற்றது. இதில், மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், புதிய நீதி கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
அப்போது செய்தியாளர்களிடம் எல்.முருகன் கூறியதாவது: அண்ணா பல்கலைக்கழகத் தில் நடைபெற்ற சம்பவம் நம் அனைவருக்கும் அவமானத்தை ஏற்படுத்தும் விதமாக அமைந்துள்ளது. திமுக அரசு ஒரு குற்றத்தை மூடி மறைப்பதில் தான் கவனமாக இருக்கிறதே தவிர, அதில் சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதில்லை. அவர்களது கடமையில் இருந்து தவறியிருக்கிறார்கள்.
இந்த சம்பவத்தில் ஒருவர் தான் ஈடுபட்டுள்ளார் என சென்னை காவல் ஆணையர் கூறியிருந்தார். ஆனால், தற்போது, இன்னொரு நபருக்கும் இதில் தொடர்பு இருப்பதாக பல்வேறு செய்திகள் வெளியாகி வருகின்றன. அந்த சார் யார்? என்பதை ஏன் திமுக மூடி மறைக்கிறது. பாதிக்கப்பட்ட பெண் குழந்தைக்கு நீதியை கொடுக்கக் கூட திமுக அரசு தயாராக இல்லை என்பது கூட்டணி கட்சியினருக்கும் தெரிந்துவிட் டது.
அந்தவகையில், அவர்கள் தங்களது வேதனையை வெளிப்படுத்தி வருகின்றனர். தமிழக அரசு உடனடியாக அந்த சம்பவத்தின் பின்னணியில் இருப்பவர்களை கண்டுபிடிக்க வேண்டும். இந்திய அரசியல் அமைப்பின் 75-ம் ஆண்டை நாம் கடைபிடித்து வருகிறோம். தமிழகத்தில் அனைத்து பகுதியிலும் இந்திய அரசியலமைப்பை போற்றும் விதமாக பல்வேறு நிகழ்ச்சிகளை பாஜக முன்னெடுக்க இருக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.














