மும்பை நாக்படா பகுதியில் நிழல் உலக தாதா தாவூத் இப்ராஹிமுக்கு சொந்தமான ஒரு கடையை வருமான வரித்துறை கடந்த 2001 செப்டம்பரில் ஏலத்தில் விட்டது. ஜெயராய் பாய் தெருவில் 144 சதுர அடி பரப்பளவு கொண்ட இந்தக் கடையை உ.பி.யின் ஆக்ராவை சேர்ந்த ஹேமந்த் ஜெயின் என்பவர் வாங்கினார். தற்போது 57 வயதாகும் இவர் 23 ஆண்டுகளுக்கு முன் தனது 34-வது வயதில் ரூ.2 லட்சம் செலுத்தி இந்தக் கடையை வாங்கினார்.
தாவூத் இப்ராஹிமுக்கு சொந்தமான சொத்துகளை யாரும் வாங்க முன்வருவதில்லை என்ற செய்தியின் அடிப்படையில் ஹேமந்த் ஜெயின் துணிந்து, அந்தக் கடையை வாங்கினார். என்றாலும் அவரது மகிழச்சி நீடிக்கவில்லை. இந்தக் கடையை தனது பெயருக்கு மாற்ற அவர் நீண்ட போராட்டதை நடத்த வேண்டியிருந்தது.
இதுகுறித்து ஹேமந்த் ஜெயின் கூறியதாவது: கடையை நான் வாங்கிய பிறகு அதிகாரிகள் என்னை தவறாக வழிநடத்தினர். மத்திய அரசுக்கு சொந்தமான நிலத்தை பிறருக்கு மாற்ற தடை உள்ளதாக கூறினர். ஆனால் அப்படி ஒரு தடை இல்லை என்று எனக்கு பிறகு தெரியவந்தது. இதையடுத்து அசல் கோப்புகள் காணாமல் போய்விட்டதாக வருமான வரித் துறை கூறியதால் பெயர் மாற்றம் தடைபட்டது. பிரதமராக வாஜ்பாய் பதவி வகித்த காலத்தில் இருந்து இது தொடர்பாக நான் பிரதமர் அலுவலகத்திற்கு தொடர்ந்து கடிதம் எழுதி வந்தேன். என்றாலும் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை.
2017-ல் சொத்து தொடர்பான கோப்புகள் முற்றிலும் மாயமானது. சந்தை மதிப்பு அடிப்படையில் முத்திரை கட்டணம் செலுத்துமாறு அதிகாரிகள் கூறியதால் பத்திரப் பதிவு செலவு ரூ.23 லட்சம் வரை சென்றது. ஆனால் கடையை ஏலத்தில் வாங்கியதால் சந்தை மதிப்பு அடிப்படையில் முத்திரை கட்டணம் செலுத்த தேவையில்லை என நான் வாதிட்டேன். இதற்கு பத்திரப் பதிவு அலுவலகத்தில் இருந்து பல ஆண்டுகளாக எந்த பதிலும் இல்லை. இறுதியாக கடந்த 2024 டிசம்பர் 19-ம் தேதி ரூ.1.5 லட்சம் முத்திரை கட்டணம் மற்றும் அபராதம் செலுத்தி கடையை எனது பெயருக்கு மாற்றினேன். இவ்வாறு ஹேமந்த் ஜெயின் கூறினார்.
எனினும் கடை இன்னும் தாவூத் அடியாட்கள் ஆக்கிரமிப்பில் உள்ளது. அங்கு லேத் மெஷின் பட்டறை இயங்கி வருகிறது. அதை கையகப்படுத்த ஹேமந்த் ஜெயின் முயன்று வருகிறார்.














