வளர்ந்த இந்தியா கனவை நனவாக்க இன்னும் கடினமாக உழைப்போம் என புத்தாண்டு தினத்தில் பிரதமர் மோடி உறுதி எடுத்துள்ளார்.
புத்தாண்டை முன்னிட்டு பிரதமர் மோடி நேற்று வாழ்த்து செய்தி வெளியிட்டார். அதில் இந்தாண்டு அனைவருக்கும் புதிய வாயப்புகள், வெற்றி மற்றும் முடிவற்ற மகிழ்ச்சியை கொண்டு வரட்டும். அனைவருக்கும் நல்ல ஆரோக்கியமும், செழிப்பும் கிடைக்கட்டும்’’ என கூறியுள்ளார். வளர்ந்த இந்தியா கனவை நனவாக்க நாங்கள் இன்னும் கடினமாக உழைப்பதில் உறுதியாக உள்ளோம் எனவும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
புத்தாண்டை முன்னிட்டு மைகவ்இந்தியா இணையதளம் எக்ஸ் தளத்தில் பிரதமரின் புத்தாண்டு வீடியோ தொகுப்பு ஒன்றை வெளியிட்டது. அதில் கடந்தாண்டில் இந்தியாவின் சாதனைகள் தொகுக்கப்பட்டுள்ளன. கட்டமைப்பு வளர்ச்சி, ராமர் கோயல் திறப்பு, பழங்குடியினர் நலம், ஏழ்மை ஒழிப்பு, சூரியனை ஆய்வு செய்ய ஆதித்யா எல்1 விண்கலம் அனுப்பியது, 70 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் மருத்துவ காப்பீடு, ஜம்மு காஷ்மீர் தேர்தல், வெளியுறவுத்துறை பேச்சுவார்த்தையின் வெற்றி போன்றவற்றுக்கு மேற்கொள்ளப்பட்ட முக்கிய முடிவுகள் இடம் பெற்றிருந்தன.
மகாராஷ்டிராவின் வத்வனில் மிகப் பெரிய கன்டெய்னர் துறைமுகம் அமைக்க கடந்த 7 மாதங்களில் ரூ.9.5 லட்சம் கோடி மதிப்பிலான கட்டமைப்பு திட்டங்களுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது, விரைவு சாலை கட்டுமான திட்டம், ரயில் பாதை விரிவாக்க திட்டம் ஆகியவை வீடியோ தொகுப்பில் இடம் பெற்றன. விவசாயிகளுக்காக ராஷ்ட்ரிய கிரிஷி விகாஸ் திட்டம், பிரதமரின் அன்னதத்தா சன்ரக்ஷன் திட்டம், சமையல் எண்ணெய்களுக்கான தேசிய திட்டம் உட்பட விவசாயிகளுக்கு ரூ.2.2 லட்சம் கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்ததும் இடம் பெற்றிருந்தன.
பிரதமரின் கடந்தாண்டு வெளிநாட்டு பயணங்கள் பற்றிய தொகுப்புகளை பிரதமர் அலுவலகம் வெளியிட்டிருந்தது. கடந்தாண்டு நடைபெற்ற சர்வதேச உச்சிமாநாடுகளில் இந்தியா தீவிர பங்காற்றியது குறித்த தகவல்களும் எக்ஸ் தளத்தில் வெளியிடப்பட்டன. புத்தாக்க கொள்கைகள் மூலம் பருவநிலை மாற்றத்தில் உலகத் தரத்திலான நடவடிக்கைகள் , புதுப்பிக்கத்தக்க எரிசக்தியில் தலைமைத்துவம், சர்வதேச சூரியசக்தி கூட்டணி, உலகளாவிய உயிரிஎரிபொருள் கூட்டணி போன்ற நடவடிக்கைகள் நீடித்த மற்றும் செழிப்பான எதிர்காலத்துக்கு வழிவகுத்தன என பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
பொருளாதாரத்தில் முன்னேற்றம், தொழில்நுட்ப மேம்பாடு, பிராந்திய மற்றும் சர்வதேச நிலைத்தனமைக்கு இந்தியாவின் பங்களிப்பு போன்றவற்றுக்கு உலகளாவிய அங்கீகாரம் கிடைத்ததாக பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.














