தமிழகத்தில் பசுமை பரப்பை அதிகரிக்கும் நோக்கில், ஒரே நாளில் 21 சிப்காட் தொழிற்பூங்காக்களிலும் ஒரு லட்சம் மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளதாக தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் நேற்று வெளியிட்ட சமூக வலைதளப்பதிவில் கூறியிருப்பதாவது: முதல்வரின் பசுமை தமிழக தொலை நோக்கு திட்டத்தின் உதவியுடன், தொழில்துறை சார்பில், புதிய முயற்சியாக, பசுமை மற்றும் சுற்றுச்சூழல் சார்ந்த தொழில் வளர்ச்சி ஊக்குவிக்கப்படுகிறது. அந்த வகையில், இன்று (டிச.20) ஒரே நாளில், ஒரு லட்சம் மரக்கன்றுகள், தமிழகம் முழுவதும் உள்ள 21 சிப்காட் தொழிற்பூங்காக்களில் நடப்பட்டுள்ளன.
முதல்வர் மு.க.ஸ்டாலின் நிர்ணயித்துள்ள இலக்கான, தமிழகத்தின் பசுமை பரப்பை 33 சதவீதம் அதிகரிக்கும் முயற்சியின் ஒரு பகுதியாக இது நடைபெற்றுள்ளது. தமிழகத்தின் தொழில்துறை வளர்ச்சி என்பது, வேலைவாய்ப்பு மற்றும் கட்டமைப்பை உருவாக்குவதுடன், சுற்றுச்சூழலையும் கவனத்தில் கொண்டு அமைகிறது. தமிழக தொழில்துறை முதல்வரின் இலக்கை அடைவதில் பங்கு வகிப்பதில் பெருமிதம் கொள்கிறது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.














