தமிழகத்தில் தரமற்ற துவரம் பருப்பு மற்றும் பாமாயில் கொள்முதலை முதல்வர் ஸ்டாலின் தடுக்க வேண்டும் என்று முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழகத்திலுள்ள ரேஷன் கடைகளுக்கு 60 ஆயிரம் டன் துவரம் பருப்பு மற்றும் 6 கோடி லிட்டர் பாமாயில் விநியோகிக்க தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் ஒப்பந்தப்புள்ளி கோரியது.
இதில் கலந்து கொண்ட நிறுவனங்களில், துவரம் பருப்புக்கு மாதிரி வழங்கிய 6 நிறுவனங்கள் மற்றும் பாமாயிலுக்கு மாதிரி வழங்கிய 3 நிறுவனங்கள் என ஆக மொத்தம் 9 நிறுவனங்களின் பொருட்கள் தரமற்றவை என ஆய்வு அறிக்கை தெரிவித்துள்ளது. மேல்மட்டத்திலிருந்து வந்த நெருக்கடி காரணமாக அந்த மாதிரிகளை மீண்டும் ஆய்வு செய்து தரமானவை என்று பரிந்துரைக்க நிர்பந்திக்கப்பட்டதாக செய்திகள் வருகின்றன.
இதன் பின்னர், ஒப்பந்தப் புள்ளிகள் திறக்கப்பட்டு, துவரம் பருப்புக்கான கொள்முதல் ஆணை 4 நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டன. அவற்றில் 2 நிறுவனங்களின் மாதிரி முதல் முறை தர பரிசோதனையில் தேர்வாகவில்லை. இதேபோன்று பாமாயிலுக்கான கொள்முதல் ஆணை 4 நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டன. அந்த நிறுவனங்களுக்கும் தர பரிசோதனையில் விதிகளை மீறி சலுகை அளிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
தரமற்ற பொருட்களை விநியோகித்தால் அவை மக்களுக்கு கேடு விளைவிக்கும் என்பதைக் கூட பொருட்படுத்தாமல், பொருட்களை கொள்முதல் செய்வது ஊழலின் உச்சக்கட்டம். ஆதாயம் கிடைத்தால் எதை வேண்டுமானாலும் செய்யலாம் என்பது கடும் கண்டனத்துக்குரியது. இதில் முதல்வர் ஸ்டாலின் தனிக்கவனம் செலுத்தி, தரமில்லாத பொருட்கள் கொள்முதல் செய்யப்படுவதை தடுத்து நிறுத்தி தரமான பொருட்களை விநியோகம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.














