மேட்டூர் அனல்மின் நிலைய விபத்து: விசாரணை நடத்த தேமுதிக கோரிக்கை

0
168

மேட்டூர் அனல்மின் நிலையத்தில் ஏற்பட்ட விபத்து குறித்து ஆணையம் அமைத்து விசாரணை நடத்த வேண்டுமென தேமுதிக கோரிக்கை விடுத்துள்ளது.

இதுகுறித்து தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: மேட்டூர் பழைய அனல்மின் நிலையம் தலா 210 மெகாவாட் மின் உற்பத்தி திறன் கொண்ட 4 யூனிட்டுகளுடன் செயல்பட்டு வருகிறது. இதில், 3-வது யூனிட்டுக்கு நிலக்கரியை கன்வேயர் பெல்ட் மூலம் அனுப்பும் ‘பங்கர் டாப்’ எனும் நிலக்கரியை அரவைக்கு முன்பு சேகரிக்கும் இடம் தரை மட்டத்தில் இருந்து 100 அடிக்கு மேல் உள்ளது.

கடந்த டிசம்பர் 19-ம் தேதி மாலை திடீரென பங்கர் டாப், அந்த அமைப்புடன் சரிந்து கீழே விழுந்துள்ளது. அதனுடன் 350 டன் நிலக்கரி குவியல் கொட்டியதில் 2 தொழிலாளர்கள் உடல் நசுங்கி பலியாகினர். மேலும், 5 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.

இதுபோன்ற விபத்துகள் தொடர்ந்து நடந்து வருகிறது. ஒப்பந்த தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்களும் தமிழக அரசு வழங்குவதில்லை. எனவே, இதில் தனி கவனம் செலுத்தப்பட வேண்டும். விபத்து குறித்தும், மரணங்கள் குறித்தும் தனி ஆணையம் அமைத்து முறையாக விசாரணை நடத்த வேண்டும்.

ஒப்பந்த தொழிலாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு இழப்பீடு தொகையும், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும் வழங்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here