உ.பி.யின் ஷாஜகான்பூர் மாவட்டத்தில் லாரி மீது கார் மோதிய விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேர் உயிரிழந்தனர். மேலும் 4 பேர் படுகாயம் அடைந்தனர்.
உ.பி.யின் ஷாஜகான்பூர் மாவட்டம், கான்ட் பகுதியை சேர்ந்தவர் ரியாசுல் அலி (45). டெல்லியில் ஆயத்த ஆடை தொழில் செய்துவந்த இவர், உறவினரின் திருமணத்திற்காக சொந்த ஊருக்கு வந்தார். இதன் பிறகு புதன்கிழமை இரவு தனது குடும்பத்துடன் டெல்லிக்கு காரில் புறப்பட்டார்.
இந்நிலையில் பரேலி – எட்டாவா நெடுஞ்சாலையில் பர்கேதா ஜெய்பால் குறுக்கு சாலைக்கு அருகில் ஒரு லாரி மீது இவர்களின் கார் அதிக வேகத்தில் மோதியது. இந்த கோர விபத்தில் ரியாசுல் அலி, அம்னா (42), தமன்னா அனு (32), குடியா (9), நூர் (6) ஆகிய 5 பேர் அதே இடத்தில் உயிரிழந்தனர். படுகாயம் அடைந்த 5 பேர் ஷாஜகான்பூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு குல்பிஷா (25) என்பவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
விபத்து தொடர்பாக லாரியை பறிமுதல் செய்த போலீஸார், லாரி டிரைவரை கைது செய்தனர். இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத் அனுதாபம் தெரிவித்துள்ளார். காயம் அடைந்தவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.














