‘‘நீதியின் அடையாளமாக கருதப்பட்ட செங்கோலை, ஊன்று கோலாக காட்சிக்கு வைத்திருந்தது காங்கிரஸ்’’ என மாநிலங்களவையில் மத்திய சுற்றுச் சூழல் அமைச்சர் புபேந்தர் யாதவ் கிண்டல் செய்தார். இதற்கு எதிர்க்கட்சி எம்.பி.க்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
சுதந்திரத்தின்போது ஆட்சி மாற்றத்தின் அடையாளமாக வழங்கப்பட்ட செங்கோல் அருங்காட்சியகம் ஒன்றில் ஊன்று கோல் என குறிப்பிடப்பட்டு காட்சி பொருளாக வைக்கப்பட்டிருந்தது. அந்த செங்கோல் தற்போது நாடாளுமன்றத்தின் புதிய கட்டிடத்தின் மையப் பகுதியில் நீதியின் அடையாளமாக வைக்கப்பட்டுள்ளது. இந்த செங்கோல் பற்றி ஏற்கெனவே சர்ச்சை கருத்துக்கள் எழும்பி ஓய்ந்திருந்தது.
இந்நிலையில் செங்கோல் பற்றி சர்ச்சை மாநிலங்களவையில் நேற்று மீண்டும் எதிரொலித்தது. மத்திய சுற்றுச்சூழல் அமைச்சர் புபேந்தர் யாதவ் பேசுகையில், ‘‘நீதியின் அடையாளமாக திகழ்ந்த செங்கோலை, ஊன்று கோல் என காட்சிக்கு வைத்திருந்தது காங்கிரஸ். இது கடந்த 75 ஆண்டுகளாக எங்கிருந்தது என காங்கிரஸார் கூறவில்லை’’ என்றார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த காங்கிரஸ் எம்.பி ஜெய்ராம் ரமேஷ், ‘‘செங்கோல் பற்றிய தகவல் எல்லாம், பாஜக., பரப்பிய கதை. இது வரலாறு அல்ல. ஆட்சி மாற்றத்தின்போது இந்த செங்கோல் முறையாக வழங்கப்படவில்லை. சிலர் வந்து அதை கொடுத்தனர். அதை புதிய கதையாக பாஜக.வினர் உருவாக்கினர் ’’ என்றார்.
இதற்கு பதில் அளித்த பாஜக தலைவரும் மத்திய சுகாதாரத்துறை அமைச்சருமான ஜே.பி.நட்டா, ‘‘இது கதை அல்ல. வரலாறு. சுதந்திரத்தின்போது, ஆட்சி மாற்றம் தொடர்பான சடங்கு ஏதேனும் இந்தியாவில் பின்பற்றப்படுகிறதா என மவுன்ட்பேட்டன் கேட்டார். அதற்கு ஏதும் இல்லை என நேரு கூறினார். ஆட்சி மாற்றத்தின் அடையாளமாக வழங்கப்பட்ட செங்கோல், அருங்காட்சியகத்துக்கு சென்றபோது, அது ஜவஹர்லால் நேருவின் ஊன்றுகோல் என காட்சிபடுத்தப்பட்டது’’ என்றார்.
அப்போது மாநிலங்களவைக்கு தலைமை தாங்கிய காங்கிரஸ் கட்சியின் ராஜீவ் சுக்லா, அமைச்சர் ஜே.பி நட்டாவிடம், இத்தகவலை எழுத்துபூர்வமாக உறுதி செய்யும்படி கூறினார்.
 
            

