செஸ் சிறப்பு அகாடமி உருவாக்கப்படும்: குகேஷின் பாராட்டு விழாவில் முதல்வர் அறிவிப்பு

0
366

சிங்கப்பூரில் நடைபெற்ற உலக செஸ் சாம்பியன்ஷிப்பில் சீனாவின் டிங் லிரெனை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றிருந்தார் இந்திய கிராண்ட் மாஸ்டரான தமிழகத்தைச் சேர்ந்த 18 வயதான டி.குகேஷ். இதன் மூலம் அவர், இளம் வயதில் உலக செஸ் சாம்பியன் பட்டம் வென்ற முதல் வீரர் என்ற சாதனையை படைத்திருந்தார். மேலும் விஸ்வநாதன் ஆனந்த்துக்கு பிறகு உலக சாம்பியன் பட்டத்தை வென்ற 2-வது இந்திய வீரர் என்ற பெருமையையும் பெற்றிருந்தார்.

உலக சாம்பியன் பட்டம் வென்ற குகேஷ், சிங்கப்பூரில் இருந்து நேற்று முன்தினம் தாயகம் திரும்பினார். இந்நிலையில் நேற்று மாலை சென்னை கலைவாணர் அரங்கத்தில் தமிழக அரசு சார்பில் உலக செஸ் சாம்பியனான குகேஷுக்கு பாராட்டு விழா நடத்தப்பட்டது. இதில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு குகேஷை ஊக்குவிக்கும் விதமாக ரூ.5 கோடியை ஊக்கத் தொகையாக வழங்கினார். விழாவில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், 5 முறை உலக சாம்பியன் பட்டம் வென்ற விஸ்வநாதன் ஆனந்த் மற்றும் அமைச்சர்கள், எம்.ஏல்.ஏக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர். விழா மேடையில் குகேஷ், உலக சாம்பியன்ஷிப்பில் பெற்ற வெற்றி கோப்பையை முதல்வரிடம் வழங்கி வாழ்த்து பெற்றார்.

விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது: 18 வயதில் உலக செஸ் சாம்பியன் பட்டத்தை வென்றுள்ள குகேஷை பாராட்டுகிறேன். இன்றைக்கு குகேஷை உலகமே வியந்து பாராட்டிக் கொண்டிருக்கிறது. வெற்றி பெற்றதும் குகேஷ் கொடுத்த ஒரு பேட்டியைப் படித்தேன். அதில் அவர், “விளையாட்டுத் திறமையோடு சேர்ந்து சிறந்த குணம், மன உறுதி ஆகியவையும் இணைந்தால்தான், இந்த வெற்றி கிடைத்திருக்கிறது” என்று அவர் சொல்லி இருந்தார்.

அவர் சொன்ன விளையாடும் திறன், சிறந்த குணம், மனஉறுதி மட்டுமல்ல. எப்போதும் புன்னகையோடு இருக்கும் அவரின் முகமும், விமர்சனங்களை தாங்கும் இயல்பும் தான், அந்த வெற்றிக்கு காரணம். 12 வயதில் ‘கிராண்ட் மாஸ்டர்’ பட்டத்தை வென்று, இன்று உலகச் செஸ் சாம்பியன் ஆகிவிட்டார். இதையெல்லாவற்றையும் சாதிக்க குகேஷ் எடுத்துக்கொண்டது, வெறும் 11 ஆண்டுகள்தான்.

இதற்குப் பின்னால் இருக்கும் உழைப்பு, விடாமுயற்சி, தன்னம்பிக்கை, இலக்கை நோக்கிய பயணம் ஆகியவற்றை நம்முடைய தமிழ்நாட்டு இளைஞர்கள் உத்வேகமாக எடுத்துக் கொள்ள வேண்டும். ஒரு குகேஷின் வெற்றி, லட்சக்கணக்கான குகேஷ்களை உருவாக்க வேண்டும்.

விஸ்வநாதன் ஆனந்த் இரண்டு முறை உலக சாம்பியன் பட்டங்கள் பெற்றபோதும் சரி. இப்போது குகேஷ் உலக சாம்பியன் ஆகும்போதும் சரி. அவர்களுக்கு உரிய மரியாதையைக் கொடுத்து, பாராட்டி பெருமைப்படுத்தும் வாய்ப்பு திமுக அரசுக்கு கிடைத்திருப்பதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன்.

இன்னும் பல திறமை வாய்ந்த செஸ் வீரர், வீராங்கனைகளை வளர்த்தெடுக்கவும், உருவாக்கவும் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் மூலம், செஸ் விளையாட்டுக்கென ‘ஹோம் ஆஃப் செஸ்’ என்ற சிறப்பு அகாடமி உருவாக்கப்படும் என்பதை மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறேன்.

குகேஷின் வெற்றி கொடுக்கும் நம்பிக்கை மற்றும் இந்தச் சிறப்பு அகாடமி ஆகியவற்றால் தமிழ்நாட்டின் கிராண்ட் மாஸ்டர்கள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரிக்கும் என உறுதியாக நம்புகிறேன். கொரட்டூரில் பிறந்த குகேஷ் இன்று உலகம் போற்றும் சதுரங்க வீரராக வளர்ந்த வரலாறு மற்ற வீரர்களுக்கும் வழிகாட்டட்டும். இவ்வாறு அவர் பேசினார்.

முன்னதாக வாலஜா சாலையில் அமைந்துள்ள அரசினர் தோட்டம் மெட்ரோ ரயில் நிலையத்தின் முன்பிருந்து திறந்தவெளி வாகனத்தில் குகேஷ் ஊர்வலமாக கலைவாணர் அரங்கத்துக்கு அழைத்துவரப்பட்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here