பஞ்சாபில் இன்று ரயில் மறியல் போராட்டத்துக்கு விவசாயிகள் அழைப்பு விடுத்துள்ளனர்.
குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு சட்டப்பூர்வ உத்தரவாதம், வேளாண் கடன் தள்ளுபடி, விவசாயிகளுக்கு ஓய்வூதியம், வழக்குகள் வாபஸ் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பஞ்சாபில் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இந்தப் போராட்டத்தின் ஒரு பகுதியாக பஞ்சாபில் இன்று (டிச. 18) நண்பகல் 12 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை ரயில் மறியல் போராட்டத்துக்கு விவசாயிகள் அழைப்பு விடுத்துள்ளனர்.
இதுகுறித்து விவசாயிகளின் தலைவர் சர்வன் சிங் பாந்தர் நேற்று கூறுகையில், “பஞ்சாப் மக்களும் இந்தப் போராட்டத்தில் பங்கேற்க வேண்டும். விவசாயிகளுக்கு மென்மேலும் ஆதரவு அளிக்க வேண்டும். பிரச்சினைகளுக்கு தீர்வு காண மத்திய அரசு முன்வரவில்லை. சாகும் வரை உண்ணாவிரதம் இருந்து வரும் விவசாயிகளின் தலைவர் ஜக்ஜித் சிங் தல்லேவாலின் உடல்நிலை மோசம் அடைந்துள்ளது. அவருக்கு ஏதாவது நேர்ந்தால் அதற்கு மத்திய அரசுதான் பொறுப்பு” என்றார்.
பாரதிய கிசான் சங்கத்தின் (ஏக்தா சித்துபூர்) தலைவரான ஜக்ஜித் சிங் தல்லேவால் பஞ்சாப் – ஹரியானா எல்லையில் உள்ள கனவ்ரி பகுதியில் கடந்த நவம்பர் 26-ம் தேதி முதல் உண்ணாவிரதம் மேற்கொண்டுள்ளார்.
இவரது போராட்டம் நேற்று 21-வது நாளை எட்டிய நிலையில் இதுகுறித்து மக்களவையில் விவாதிக்க வேண்டும் என கோரி விருதுநகர் காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர் நேற்று ஒத்திவைப்பு தீர்மான நோட்டீஸ் அளித்தார்.
விவசாயிகளின் பிரதிநிதிகளுடன் மத்திய அரசு அர்த்தமுள்ள பேச்சுவார்த்தையில் ஈடுபட வேண்டும் என்றும் அந்த நோட்டீஸில் அவர் வலியுறுத்தி இருந்தார்.














