தமிழகத்தில் 11 அரசு பொறியியல் கல்லூரிகளில் அதிநவீன ஆய்வகங்கள் அமைக்க ரூ.12.38 கோடி ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியிடப்பட்டிருப்பதாக உயர்கல்வித் துறை அமைச்சர் கோவி.செழியன் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக நேற்று அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழக முதல்வரால் உயர்கல்வித் துறையின் வளர்ச்சிக்கு பல்வேறு திட்டங்கள் வகுத்து கொடுக்கப்பட்டு, செயல்படுத்தப்பட்டு வருகின்றன. அந்த வகையில், 2024-2025-ம் நிதி ஆண்டு உயர்கல்வித் துறை மானியக் கோரிக்கையில் அறிவிக்கப்பட்ட அறிவிப்புகளின்படி மாநிலத்தில் உள்ள 11 அரசு பொறியியல் கல்லூரிகளில் புதிய நவீன ஆய்வகங்களை அமைக்க தற்போது நிதி ஒதுக்கப்பட்டு அதற்கான அரசாணையும் வெளியிடப்பட்டு இருக்கிறது.
பொறியியல் பயிலும் மாணவர்கள் பொருட்களின் இணைய பயன்பாடுகள் மற்றும் பிற மேம்பட்ட அமைப்புகள் அடிப்படையிலான திட்டங்களை உருவாக்கும் வகையில் காரைக்குடி மற்றும் போடிநாயக்கனூர் ஆகிய இடங்களில் உள்ள 2 அரசு பொறியியல் கல்லூரிகளில் பொருட்களின் இணைய ஆய்வகம் அமைக்க தலா ரூ.92 லட்சத்து 10 ஆயிரம் வீதம் மொத்தம் ஒரு கோடியே 84 லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
வேலூர், தஞ்சாவூர், திருச்சி ஆகிய இடங்களில் உள்ள 3 அரசு பொறியியல் கல்லூரிகளில் பொருள்சேர் உற்பத்தி ஆய்வகம் அமைக்க தலா ஒரு கோடியே 16 லட்சம் வீதம், ரூ.3 கோடியே 48 லட்சமும், கோவை, சேலம், பர்கூர் ஆகிய இடங்களில் உள்ள 3 அரசு பொறியியல் கல்லூரிகளில் செயற்கை நுண்ணறிவு மற்றும் எந்திரனியல் (ரோபோட்டிக்ஸ்) ஆய்வகம் அமைக்க தலா ஒரு கோடியே 31 லட்சத்து 87 ஆயிரம் வீதம் ரூ.3 கோடியே 95 லட்சத்து 63 ஆயிரமும், திருநெல்வேலி, தருமபுரி, ஈரோடு ஆகிய இடங்களில் உள்ள 3 அரசு பொறியியல் கல்லூரிகளில் மின்சார வாகன தொழில்நுட்ப ஆய்வகம் அமைக்க தலா ஒரு கோடியே 3 லட்சத்து 33 ஆயிரம் வீதம் ரூ.,3 கோடியே 10 லட்சமும் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
ஆக மொத்தம் 11 அரசு பொறியியல் கல்லூரிகளில் மாணவர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில், நவீன ஆய்வகங்கள் அமைப்பதற்காக ரூ.12.38 கோடி நிதி ஒதுக்கி அரசாணைகள் வெளியிடப்பட்டுள்ளன. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.














