மகாகவி பாரதியாரின் 143-வது பிறந்தநாள் விழா ஆளுநர், தலைவர்கள் மலர்தூவி மரியாதை

0
173

மகாகவி பாரதியார் 143-வது பிறந்த நாள் விழா சென்னையில் நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி பாரதியார் உருவப் படத்திற்கு ஆளுநர் ஆர்.என்.ரவி, அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், பி.கே.சேகர்பாபு உள்ளிட்டோர் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.

மகாகவி பாரதியார் 143-வது பிறந்த நாள் விழா சென்னையில் நேற்று வழக்கமான உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டது. சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் அமைந்துள்ள பாரதியார் சிலைக்கு கீழே மலர்களால் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த அவரது உருவச் சிலைக்கு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

தமிழக அரசு சார்பில் சென்னை காமராஜர் சாலை, மெரினா கடற்கரையில் அமைந்துள்ள பாரதியார் உருவச் சிலைக்கு அருகே மலர்களால் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த அவரது உருவப் படத்திற்கு அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், பி.கே.சேகர்பாபு, சென்னை மாநகர மேயர் ஆர்.பிரியா உள்ளிட்டோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

பாரதியார் பிறந்த நாளையொட்டி முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது சமூக வலைத்தளப் பதிவில், “உய்வகை காட்டும் உயர் தமிழுக்குப் புதுநெறி காட்டிய புலவன். தமிழ்க்கவியில், உரைநடையில், தனிப்புதுமை படைத்த செந்தமிழ்த் தேனீ மகாகவி பாரதியாரின் பிறந்த நாளில் அவரை வணங்குகிறேன். மொழி, நாடு, பெண் விடுதலை, பிற்போக்குத்தனங்கள் எதிர்ப்பு என தமிழுக்கும் தமிழ்ச் சமூகத்துக்கும் இந்தியத் திருநாட்டின் விடுதலைக்கும் தொண்டு செய்த பாரதி வாழிய” என புகழாராம் சூட்டியுள்ளார்.

சென்னை மெரினா கடற்கரையில் பாரதியார் உருவப் படத்திற்கு பாஜக மூத்த தலைவரும் தெலங்கானா முன்னாள் ஆளுநருமான டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் மலர்தூவி மரியாதை செலுத்தினார். மேலும், திருவல்லிக்கேணி பாரதியார் இல்லத்தில் உள்ள அவரது சிலைக்கும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். வானவில் பண்பாட்டு மையம் சார்பில் நடைபெற்ற ஜதி பல்லக்கு பாரதி திருவிழாவிலும் தமிழிசை சவுந்தரராஜன் கலந்துகொண்டார். மேலும், தலைவர்கள் பாரதியாருக்கு புகழாரம் சூட்டியுள்ளனர். அதன் விவரம்:

அமமுக பொதுச் செயலாளர் டிடிவி.தினகரன்: மக்களிடையே விடுதலை உணர்வை தூண்டும் விடுதலை போராட்ட வீரராக, பெண்களின் உரிமைகளை மீட்டெடுத்த போராளியாக, சமூகத்தை மேம்படுத்தும் கவிதைகளை படைத்த சமூக சீர்திருத்தவாதியாக திகழ்ந்த மகாகவி பாரதியாரை எந்நாளும் போற்றி வணங்கிடுவோம்.

மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன்: முன்னைப் பழைமையும் பின்னை நவீனத்துவமும் கைகோத்த விந்தைக்குச் சொந்தக்காரர் மகாகவி பாரதி. என்றைக்குமான சிந்தனைகளை நமக்கு தந்துவிட்டுப் போன பெருங்கவிஞரின் பிறந்த நாளில் அவர் தம் சொற்களைச் சிந்தித்து வாழ்த்துவோம்.

நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்: சொல்லில் உயர்வு தமிழ்ச் சொல்லே – அதைத் தொழுது படித்திடடி பாப்பா, தமிழ்த் திருநாடு தன்னைப் பெற்ற தாயென்று கும்பிடடி பாப்பா, அமிழ்தில் இனியதடி பாப்பா என்று பல நூற்றாண்டுகளாகப் பெருந்தொய்வுற்றிருந்த தமிழ் இலக்கத்திற்கு புது ரத்தம் பாய்ச்சி கவிப்புரட்சிக்கு வித்திட்டவர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here