ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு பயன்படுத்தப்பட்ட வெடிகுண்டுகள் சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு கொண்டு வரப்பட்டது எப்படி என்பது குறித்து தனியாக விசாரணை நடத்த காவல் துறைக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதான வழக்கறிஞர் அஸ்வத்தாமன் உள்ளிட்டோரை குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையில் அடைத்ததை எதிர்த்து புதிதாக மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. நீதிபதிகள் எஸ்.எம்.சுப்ரமணியம், எம்.ஜோதிராமன் அமர்வில் இந்த மனுக்கள் நேற்று விசாரணைக்கு வந்தன.
அப்போது தமிழக அரசு தரப்பில் ஆஜரான கூடுதல் தலைமை வழக்கறிஞர் பி.குமரேசன் கூறியதாவது: ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில், ஒருவேளை அவர் உயிர் தப்பினால் குண்டு வீசி கொலை செய்யும் எண்ணத்தில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் வெடிகுண்டுகளையும் பயன்படுத்தியுள்ளனர். இந்த வழக்கில் வெடிக்காத அந்த குண்டுகளை காவல் துறை பத்திரப்படுத்தி நீதிமன்றத்தில் ஒப்படைத்துள்ளது.
இந்த குண்டுகளை ஒரு கும்பல் ஓமந்தூரார் மருத்துவமனையில் இருந்து உயர் நீதிமன்ற வளாகத்தில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு கொண்டு வந்துள்ளனர். அங்கிருந்து மற்றொரு கும்பல் அதை எடுத்துக்கொண்டு சம்பவ இடத்துக்கு சென்று ஆம்ஸ்ட்ராங்கை ஆயுதங்களால் வெட்டிக் கொன்றுவிட்டு தப்பியுள்ளது. ஆனால், அவர்கள் வெடிகுண்டுகளை பயன்படுத்தவில்லை.
இந்த வழக்கில் அஸ்வத்தாமன் உட்பட மொத்தம் 26 பேர் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தற்போது வரை 10 பேர் குண்டர் சட்டத்தை எதிர்த்து மனு தாக்கல் செய்துள்ளனர். இந்த வழக்கில் கூட்டு சதி உட்பட பல்வேறு சதிச்செயல்கள் அரங்கேறியுள்ளதால் அதுதொடர்பாகவும் விசாரிக்கப்பட்டு வருகிறது.
ஏற்கெனவே தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்கள் வரும் ஜனவரி மாதத்துக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளதால் இந்த வழக்கையும் தள்ளி வைக்க வேண்டும். இவ்வாறு அவர் வாதிட்டார். அப்போது மனுதாரர்கள் தரப்பில், ‘‘ஒவ்வொரு முறை இந்த வழக்கு விசாரணைக்கு வரும்போதும் அரசு தரப்பில் இதே காரணத்தை கூறுகின்றனர். பதில் மனு தாக்கல் செய்ய தாமதம் செய்கின்றனர்’’ என்று கூறப்பட்டது.
இதையடுத்து நீதிபதிகள், இந்த வழக்கில் குண்டர் சட்டத்தை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்டுள்ள அனைத்து மனுக்கள் மீதும் அரசு தரப்பில் பதில் மனுக்களை தாக்கல் செய்ய உத்தரவிட்டு, விசாரணையை வரும் ஜனவரி முதல் வாரத்துக்கு தள்ளி வைத்துள்ளனர். மேலும், சென்னை உயர் நீதிமன்ற வளாகத்துக்குள் அம்பேத்கர் சிலை அருகே வெடிகுண்டுகளை கொண்டு வந்தது எப்படி என்பது குறித்தும் தனியாக விசாரணை நடத்த போலீஸாருக்கு உத்தரவிட்டுள்ளனர்.














