நில ஆக்கிரமிப்பில் ஈடுபட்டவர்கள் அந்த நிலத்துக்கு சட்டரீதியாக உரிமை கோர முடியாது என உச்ச நீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளது.
பர்மாவில் இருந்து தாயகம் திரும்பிய அகதிகளுக்கு வீட்டு வசதி ஏற்படுத்திக் கொடுப்பதற்காக பர்மா இந்தியர்கள் வீட்டு வசதி கட்டுமான கூட்டுறவு சங்கம் உருவாக்கப்பட்டு, பாலவாக்கம் திருவள்ளுவர் நகரில் 24 ஏக்கர் நிலம் வாங்கப்பட்டது.
இந்நிலையில், இதில் 4.47 ஏக்கர் நிலத்தை 250 குடும்பத்தினர் ஆக்கிரமித்து வீடுகளைக் கட்டி நீண்டகாலமாக குடியிருந்து வருகின்றனர். இந்த ஆக்கிரமிப்பாளர்களை காலி செய்து நிலத்தை மீட்டு ஒப்படைக்கக்கோரி, பர்மா இந்தியர்கள் வீட்டு வசதி கட்டுமான கூட்டுறவு சங்கம் சா்ரபில், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
அந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், அங்கு வீடு கட்டி வசிக்கும் ஆக்கிரமிப்பாளர்களை காலி செய்யும்படி செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியருக்கும், வட்டாட்சியருக்கும் உத்தரவிட்டது. சென்னை உயர் நீதிமன்றத்தின் இந்த உத்தரவை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை உயர் நீதிமன்றமும், உச்ச நீதிமன்றமும் தள்ளுபடி செய்தது.
இந்நிலையில் அந்த இடத்தை காலி செய்துவிட்டு, கண்ணகி நகரில் உள்ள குடிசைமாற்று வாரிய வீடுகளுக்கு இடம்பெயரும்படி வட்டாட்சியர் பிறப்பித்த நோட்டீஸை எதிர்த்து முனியப்பன், பெருமாள், கன்னியப்பன் உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்டோர் தாக்கல் செய்த மனுவை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. அதையடுத்து இதுதொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் ஜெ.பி.பர்திவாலா, ஆர்.மகாதேவன் ஆகியோர் அடங்கிய அமர்வு, ‘‘நில ஆக்கிரமிப்பில் ஈடுபட்டவர்கள் அந்த நிலத்துக்கு சட்டரீதியாக உரிமை கோர முடியாது. ஆக்கிரமிப்பு செய்துவிட்டு அதற்கு நீதிமன்றம் மூலம் உரிமையியல் வழக்கில் தீர்வு காணலாம் எனக் கூறுவதை ஒருபோதும் ஏற்க முடியாது. மாற்று இடம் வழங்குவது தொடர்பாக மனுதாரர்கள் மீண்டும் சென்னை உயர் நீதிமன்றத்தை அணுகலாம்’’ எனக் கூறி வழக்கை முடித்துவைத்துள்ளனர்.














