மாணவர்கள் போதைப் பழக்கத்துக்கு அடிமையாகி இருக்கிறார்களா? என்பதை ஆசிரியர்கள் கண்காணிக்க வேண்டும் என உணவு பாதுகாப்புத் துறை வலியுறுத்தி உள்ளது. உணவு பாதுகாப்புத் துறை சார்பில் அரசுப் பள்ளி ஆசிரியர்களுடனான கலந்துரையாடல் கூட்டம் சென்னையில் நேற்று நடைபெற்றது.
துறையின் ஆணையர் ஆர்.லால்வேனா தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் உணவு பாதுகாப்புத் துறை நியமன அதிகாரி சதீஷ்குமார், ஜெபராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இக்கூட்டத்தில் போதைப் பழக்கத்தின் தீமைகள் குறித்து விளக்கப்பட்டது.
நல்வழி கூறவேண்டும்: இதில், உணவு பாதுகாப்புத் துறை நியமன அதிகாரி சதீஷ்குமார் பேசும்போது, “மாணவ சமுதாயம் போதையின் பாதையில் செல்வ தைத் தடுக்கும் கடமை ஆசிரியர்களுக்கு இருக்கிறது. மாணவர்கள் யாராவது போதைப் பழக்கத்தில் ஈடுபட்டால் அவர்களை அனைவரின் முன்பாக கண்டிக் காமல், நல்வழி கூறி சிந்திக்கச் செய்யுங்கள்.
அரசின் மறுவாழ்வு மையங்களுக்கு அவர்களை அனுப்ப உதவுங்கள். உங்கள் கண்காணிப்பு அவர்களின் நாளைய வாழ்க்கையை காப்பாற்ற செய்யப்படும் பெரும் முயற்சியாகும்.
நன்னெறி போதனை: இது சம்பந்தமான தகவல்களுக்கு உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகளை தொடர்புகொள்ளுங்கள். வகுப்பறைகளில் நன்னெறி கல்வி போதிக்க வேண்டும்” என்றார்.














