குமரி மலையோர கிராமமான களியல் பகுதி வழியாக ஆரல்வாய்மொழி – நெடுமங்காடு மாநில சாலை செல்கிறது. இந்த பகுதி வழியாக பாய்ந்து செல்லும் கோதை ஆற்றை கடக்க கடந்த 60 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட பாலம் ஒன்று உள்ளது.
இந்த பாலம் கடந்த சில வருடங்களுக்கு முன்பு வரை எந்த சேதமும் ஏற்படாமல் உறுதியாக இருந்தது. இந்த பாலத்தை சம்பந்தப்பட்ட துறையினர் முறையாக பராமரிக்காததால் பாலத்தின் அடிப்பகுதியில் பல இடங்களில் காங்கிரீட் தற்போது பெயர்ந்து விழுகிறது. அத்துடன் செடி கொடிகள் வளர்ந்து பரிதாப நிலையில் உள்ளது.
பாலத்தின் மேற்பகுதியில் குவிந்து கிடக்கும் மண், புதர்கள் கூட சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் பாலம் தற்போது உறுதி தன்மையை இழந்து விபத்து ஏற்படுத்தும் நிலையில் உள்ளதாக சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர். உயரதிகாரிகள் ஆய்வு செய்து தகுந்த நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.














