ஆயுஷ்மான் சுகாதார அட்டைக்காக கடந்த 2 மாதங்களில் 25 லட்சத்துக்கும் மேற்பட்ட 70 வயதுடைய முதியோர் விண்ணப்பம் செய்துள்ளனர் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:
70 அல்லது அதற்கு மேற்பட்ட முதியோருக்காக ஆயுஷ்மான் வாய் வந்தனா என்ற பெயரில் ஆயுஷ்மான் சுகாதார அட்டையை மத்திய அரசு அறிமுகம் செய்துள்ளது. இந்த அட்டையைப் பயன்படுத்தி 22 ஆயிரத்துக்கும் அதிகமான 70 வயதுக்கு மேற்பட்ட முதியோர் இலவசமாக சிகிச்சை பெற்றுள்ளனர். இதற்கான செலவு ரூ.40 கோடியை மத்திய அரசே வழங்கியுள்ளது.
இந்நிலையில் இந்த அட்டை வேண்டி கடந்த 2 மாதங்களில் 25 லட்சத்துக்கும் அதிகமான 70 வயதுக்கு மேற்பட்ட முதியோர் விண்ணப்பம் செய்துள்ளனர்.
இந்த அட்டையை பயன்படுத்தி ஆண்டுதோறும் ரூ.5 லட்சம் மதிப்பிலான சிகிச்சையை இலவசமாக ஒருவரோ அல்லது அவரது குடும்பத்தைச் சேர்ந்தவர்களோ பெற முடியும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.