பாரதியாரின் பிறந்தநாள் விழா கட்டுரைப் போட்டிகளில் வெற்றி பெற்ற பள்ளி, கல்லூரி மாணவர்களின் விவரங்களை ஆளுநர் மாளிகை தற்போது வெளியிட்டுள்ளது.
இதுகுறித்து வெளியிட்ட செய்திக்குறிப்பு விவரம்: மகாகவி பாரதியாரின் 143-வது பிறந்தநாள் நாளை (டிச.11) கொண்டாடப்பட உள்ளது. இதனுடன் தேசிய மொழிகள் தின விழாவை முன்னிட்டு பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கான கட்டுரைப் போட்டிகள் தமிழ், ஆங்கிலம் ஆகிய மொழிகளில் சமீபத்தில் நடத்தப்பட்டன. பள்ளி மாணவர்களுக்கான தலைப்பாக ‘வேதாரண்யம் உப்பு சத்தியாகிரகம்’ மற்றும் கல்லூரி மாணவர்களுக்காக ‘வேதாரண்யம் உப்பு சத்தியாகிரகமும், தேசிய சுதந்திர உணர்வில் அதன் மறுமலர்ச்சியும்’ என்ற தலைப்பில் கட்டுரைப் போட்டிகள் நடைபெற்றன.
இந்த போட்டியில் மாணவர்கள் ஆர்வத்துடன் சமர்ப்பித்த கட்டுரைகளில் நடுவர் குழு பரிந்துரை முடிவுகள் தற்போது வெளியிடப்பட்டுள்ளன. அதன்படி பள்ளிப் பிரிவுக்கான தமிழ் வழியில் எஸ்.எம்.விகாஷ் குமார் (கன்னியாகுமரி), ஏ.ஆர்.ஜானிஸ்தா (சென்னை), பி.நிவேதா (சென்னை) ஆகியோரும், ஆங்கில வழியில் ஆர்.அக்ஷராஸ்ரீ (மதுரை), இ.ஜெயகாயத்திரி (திருநெல்வேலி), பி.எஸ்.சிந்து (சென்னை), ஆர்.கனிஷ்கா (விழுப்புரம்) ஆகியோர் முதல் 3 இடங்களைப் பெற்றுள்ளனர்.
அதேபோல், கல்லூரிப் பிரிவில் தமிழ் வழியில் ஜெ.திவ்யலட்சுமி (ராணிப்பேட்டை), எஸ்.சுப்ரமணிய சிவா (கோயம்புத்தூர்), ஏ.பவித்ரா (ராணிப்பேட்டை) ஆகியோரும், ஆங்கில வழியில் அபிமன்யு குமார் சர்மா (சென்னை), எஸ்.முஹம்மது சுஹைல் (கோயம்புத்தூர்), பி.தன்யலட்சுமி (சென்னை) ஆகியோரும் முதல் 3 இடங்களைப் பிடித்துள்ளனர். இவர்களுக்கு முறையே தலா ரூ.50,000, ரூ.30,000 மற்றும் ரூ.25,000 பரிசுத் தொகையுடன் சான்றிதழும் வழங்கப்படும். சிறப்புப் பரிசு பெற்றவர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ் மட்டும் அளிக்கப்படும். இந்த பரிசுகள் ஜனவரி 26-ம் தேதி சென்னை ஆளுநர் மாளிகையில் நடைபெறவுள்ள குடியரசு தின விழாவில் வழங்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.