இருட்டை விமர்சித்துக் கொண்டிருப்பதைவிட, ஒரு மெழுகுவத்தியை ஏற்றிவைப்பது சிறந்த செயல் என்பர். அப்படிப்பட்ட ஒரு செயலைத்தான் சென்னை, மயிலாப்பூர் ஃபைன் ஆர்ட்ஸில் கடந்த ஞாயிறன்று, உலக கர்னாடக இசைக் கலைஞர்களின் கூட்டமைப்பு முன்னெடுத்தது.
டிசம்பர் மாதத்தில் எண்ணற்ற சபாக்களால் நடத்தப்படும் ஆயிரக்கணக்கான மார்கழி இசை, நாட்டிய திருவிழாக்களின் சிறப்புக்காக இந்தியாவின் கலாச்சார தலைநகராக சென்னை மாநகரம் கொண்டாடப்பட்டாலும், சபாக்களில் ரசிகர்களின் கூட்டம் குறைந்துகொண்டே வருகிறது.
கர்னாடக இசை உலகுக்கு புதிய ரசிகர்களை உருவாக்கும் உத்தியை உலக கர்னாடக இசைக் கலைஞர்களின் கூட்டமைப்பின் தலைவர் சுதா ரகுநாதனின் வழிநடத்துதலுடன் நித்யஸ்ரீ மகாதேவன் முன்னெடுத்ததுதான் `ரசிகனை உருவாக்கும் திட்டம்’ (Create a Rasika – CAR).
புதிய தலைமுறை ரசிகர்களை உருவாக்குவதற்காக முச்சந்திகளிலோ, பூங்காக்களிலோ, மக்கள் கூடும் சந்தைகளிலோ, பேருந்துகளிலோ, ரயில்களிலோ கச்சேரிகளை நடத்தவில்லை. மாறாக, அரசுப் பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகள் தோறும் சென்று கர்னாடக இசையை ரசிப்பதில் குழந்தைகளிடம் இருக்கும் மனத்தடைகளை அகற்றும் பயிற்சிப்பட்டறைகளை நடத்தினர்.
இந்தப்பட்டறைகளின் பலனாக கர்னாடக இசையைக் குறித்து இன்னும் அதிகம் தெரிந்து கொள்ள ஆர்வம் தெரிவிக்கும் மாணவர்களுக்கு `மாணவ கர்னாடக இசைத் தூதுவர்’ என்னும் அடையாள அட்டையை வழங்கி அவர்களின் இசைத் திறனை வளர்ப்பதற்கான முயற்சிகளை எடுக்கின்றனர்.
அப்படித் தேர்ந்தெடுக்கப்பட்டமாணவர்களுக்கு, ‘மாணவ கர்னாடக இசைத் தூதுவர்’ அடையாள அட்டை வழங்கும் விழாவில் இந்த திட்டத்தை செயல்படுத்திய நித்யஸ்ரீ மகாதேவன் பேசியதாவது: இளம் இசைக் கலைஞர்களும் நிபுணத்துவம் வாய்ந்த பிரபல இசைக் கலைஞர்களும் கைகோத்துதான் இத்தகைய மகத்தான பணியைச் செய்ய முடிந்தது.
அனைவரது உழைப்பும் அனுபவமும் இந்தத்திட்டத்தில் அடங்கியுள்ளது. கடந்த இரண்டு, மூன்று மாதங்களில் 30-ல் இருந்து 35 பள்ளி மாணவர்களை சந்தித்து, அவர்களை ஒருங்கிணைத்து, அவர்களுக்கான இசைப் பயிற்சிப் பட்டறைகளை நடத்தினோம்.
கர்னாடக இசையைப் பற்றிய சுவாரஸ்யமான அறிமுகத்தை வழங்குவதுடன், கர்னாடக இசையைக் குறித்து மாணவர்களிடம் காணப்படும் தவறான கற்பிதங்களையும் போக்கும் வகையில் காணொலிகள், இசைக் கலைஞர்களின் நேரடி விளக்கத்துடன் பயிற்சிப் பட்டறைகளை நடத்தினோம். இந்த முயற்சியின் பலன்தான் இந்த மேடையில் `மாணவ கர்னாடக இசைத் தூதுவர்’ அடையாள அட்டையைப் பெற்றிருக்கும் மாணவர்கள்.
ஏறக்குறைய 650 மாணவர்கள் கர்னாடக இசைத் தூதுவர்களாக விருப்பம் தெரிவித்து பதிவு செய்துள்ளனர். இப்படி தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் மாணவர்களுக்கு இந்த ஆண்டு மார்கழி இசைக் கச்சேரிகளை நேரடியாக கேட்டு ரசிப்பதற்காக இலவச அனுமதியை பல சபாக்கள் தருவதற்கு முன்வந்திருக்கின்றன.
தேர்ந்தெடுக்கப்பட்ட கர்னாடக இசைத் தூதர்கள் அனைவரையும் ஒருங்கிணைக்கும் விழா டிச.25-ம் தேதி சென்னை, ராதாகிருஷ்ணன் சாலையில் உள்ள உட்லேண்ட்ஸ் ஓட்டலில் மாலை 3 மணி அளவில் நடைபெறவிருக்கிறது. இந்தக் குழந்தைகள் மற்ற குழந்தைகளையும் இந்தத் திட்டத்தில் சேர்ப்பதற்கு உதவியாக இருப்பர். இதன் மூலம் கர்னாடக இசையை ரசிக்கும் ஒரு புதிய தலைமுறை ரசிகர்கள் கர்னாடக இசை உலகத்துக்கு கிடைப்பார்கள்” என்றார்.














