உலக செஸ் சாம்பியன்ஷிப்: 11-வது சுற்றில் குகேஷ் வெற்றி

0
269

உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டியின் 11-வது சுற்றில் இந்திய கிராண்ட்மாஸ்டர் டி. குகேஷ் வெற்றி பெற்று முன்னிலை பெற்றுள்ளார்.

உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டி சிங்கப்பூரில் நடைபெற்று வருகிறது. இதில் நடப்பு சாம்பியனான சீனாவின் டிங் லிரெனுடன், இந்திய கிராண்ட் மாஸ்டரான குகேஷ் மோதி வருகிறார்.

14 சுற்றுகளை கொண்ட இந்த போட்டியில் முதல் சுற்றில் டிங் லிரென் வெற்றி பெற்றார். ஆனால், 2-வது சுற்று டிராவில் முடிவடைந்தது. இதைத் தொடர்ந்து நடைபெற்ற 3-வது சுற்றில் குகேஷ் வெற்றி பெற்றார். இதன் பிறகு நடைபெற்ற அடுத்த 7 சுற்றுகளும் தொடர்ச்சியாக டிராவில் முடிவடைந்தன.

இந்நிலையில் நேற்று 11-வது சுற்று ஆட்டம் நடைபெற்றது. டிங் லிரென் கருப்பு காய்களுடனும், குகேஷ் வெள்ளை காய்களுடனும் விளையாடினார்கள்.

இந்த சுற்றில் அபாரமாக செயல்பட்ட டி.குகேஷ், 28-வது நகர்த்தலின்போது வெற்றி பெற்றார். இதையடுத்து முழு புள்ளியைப் பெற்ற குகேஷ் 6 புள்ளிகளுடன் முன்னிலை பெற்றுள்ளார். டிங் லிரென், தற்போது 5 புள்ளிகளுடன் உள்ளார்.

6 புள்ளிகளைப் பெற்று குகேஷ் முன்னிலையில் இருப்பதால் அவர் சாம்பியன்ஷிப் பட்டத்தை வெல்வதற்கான வாய்ப்புகள் அதிகரித்துள்ளன. முதலில் 7.5 புள்ளியை எட்டுபவர் சாம்பியன் பட்டம் வெல்வார். 12-வது சுற்று ஆட்டம் இன்று பிற்பகல் 2.30 மணிக்கு நடைபெறவுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here