பேச்சிப்பாறை பகுதியைச் சேர்ந்தவர் பாபு சுந்தர்சிங் மனைவி ஷோபா (45). இவர் குலசேகரத்தில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் ஆசிரியையாகப் பணியாற்றி வருகிறார். இவர் நேற்று (4-ம் தேதி) பணிக்குச் செல்வதற்காக பேச்சிப்பாறையில் இருந்து அரசு பஸ்சில் ஏறிச் சென்றுள்ளார். பஸ் குலசேகரம் சந்தை சந்திப்பு பகுதியில் சென்றபொழுது நிறுத்தம் இல்லாத பகுதியில் நின்ற ஒருவர் கையைக் காட்டி பஸ்சை நிறுத்தினார். பஸ்சை டிரைவர் நிறுத்திய உடன் ஷோபாவும் திடீரென பஸ்சிலிருந்து இறங்க முயன்றார்.
இதில் நிலைதடுமாறி விழுந்து தலையில் படுகாயம் அடைந்தார். பஸ்சில் வந்தவர்கள் அவரை மீட்டு குலசேகரத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக திருவனந்தபுரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதுகுறித்த புகாரின்பேரில் குலசேகரம் போலீசார் கவனக்குறைவாக பஸ் ஓட்டியதாக டிரைவர் ஜேம்ஸ் ராஜ், கண்டக்டர் செல்வின் ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.














