“மன வேதனை…” – ‘புஷ்பா 2’ சிறப்புக் காட்சி நெரிசலில் பெண் பலியானது குறித்து படக்குழு உருக்கம்

0
126

ஹைதராபாத்தில் ‘புஷ்பா 2’ சிறப்புக் காட்சியைக் காண குடும்பத்துடன் சென்ற பெண் ஒருவர் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த நிலையில், “மன வேதனை அடைந்தோம். ஆதரவு நல்குவோம்” என படத்தின் தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக ‘புஷ்பா 2’ படத்தின் தயாரிப்பு நிறுவனமான மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனத்தின் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ள பதிவு: “நேற்று (டிச.4) இரவு சிறப்பு திரையிடலின்போது நடைபெற்ற சோகமான சம்பவத்தால் நாங்கள் மிகுந்த மன வேதனை அடைந்தோம். பாதிக்கப்பட்ட குடும்பத்துக்காக நாங்கள் பிரார்த்திக்கிறோம். மருத்துவமனையில் ஒரு குழந்தைக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த இக்கட்டான நேரத்தில் அவர்களுக்கு துணையாக நிற்பதற்கு சாத்தியமான அனைத்து ஆதரவையும் வழங்குவதற்கு நாங்கள் கடமைப்பட்டுள்ளோம். ஆழ்ந்த வருத்தங்களுடன் மைத்ரி மூவி மேக்கர்ஸ்” என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடித்துள்ள ‘புஷ்பா 2’ திரைப்படம் வியாழக்கிழமை வெளியானது. இப்படத்தின் அதிகாலை காட்சிக்கு தமிழகத்தைத் தவிர பரவலாக பல மாநிலங்களில் அனுமதி அளிக்கப்பட்டது. இந்தச் சூழலில், ஹைதராபாத்தில் நேற்று (புதன்கிழமை) மாலை ப்ரீமியர் காட்சியைக் காண குடும்பத்துடன் வந்த பெண் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தார்.

உயிரிழந்த பெண் ரேவதிக்கு வயது 39. கூட்ட நெரிசலில் சிக்கி மயங்கிய அப்பெண்ணை காவலர்கள் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்துள்ளனர். ஆனாலும் சிகிச்சை பலனின்றி அந்தப் பெண் உயிரிழந்தார். அவருடைய குழந்தையும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறது. ஹைதராபாத்தில் சிக்கடப்பள்ளியில் சந்தியா திரையரங்கில் 9.30 மணிக்கு ப்ரீமியர் காட்சி நடைபெறுவதாக இருந்தது. அதற்கு வந்த அல்லு அர்ஜுனைக் காண கூட்டத்தில் ரசிகர்கள் முண்டியடித்தபோது இந்த விபத்து நடந்தது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here