தேவேந்திர பட்னாவிஸ் வழக்கறிஞராகவும் ஆர்.எஸ்.எஸ். உறுப்பினராகவும் பயிற்சி பெற்றவர். தனது புத்திசாலித்தனம் மற்றும் கூர்மையான விவாத திறன்களுக்காக நற்பெயர் பெற்றார். நாக்பூர் தென்மேற்கு சட்டப்பேரவைத் தொகுதியில் தொடர்ச்சியாக 6 முறை வெற்றி பெற்றுள்ளார்.
தேவேந்திர பட்னாவிஸ் (54) இளம் வயதில், தனது தந்தையை சிறையில் அடைத்த முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் பெயரைக் கொண்ட (இந்திரா கான்வென்ட்) பள்ளியில் படிப்பைத் தொடர மறுத்து விட்டார். அதன் பிறகு சரஸ்வதி வித்யாலயாவில் சேர்ந்து படித்தார். இதுவே அவரது அரசியல் பயணத்துக்கு தொடக்கமாக அமைந்ததுடன் பணக்கார மாநிலத்தின் முதல்வர் பதவியை எட்டிப் பிடிக்கவும் அடித்தளமாக அமைந்தது.
பட்னாவிஸ் 27 வயதில் நாக்பூரின் இளைய மேயராக பதவியேற்றார். முதல் முறையாக 2014-ம் ஆண்டில் முதல்வராக பதவியேற்ற பட்னாவிஸ், மராத்தா இடஒதுக்கீடு பிரச்சினை உள்ளிட்ட முக்கிய சவால்களை திறமையாக கையாண்டார்.
முந்தைய அரசின் நீர்ப்பாசன ஊழலை அம்பலப்படுத்தியதன் மூலம், ஊழலை எதிர்த்துப் போராடுவதற்கான தனது உறுதிப்பாட்டை பட்னாவிஸ் வெளிப்படுத்தினார். அவரது தலைமையின் கீழ், மகாராஷ்டிரா குறிப்பிடத்தக்க உள்கட்டமைப்பு வளர்ச்சியைக் கண்டது.














