‘புஷ்பா 2’ படத்தில் பணியாற்றியது மிகவும் மகிழ்ச்சி என்றும், இந்தப் பயணத்தின் மூலம் நிறைய அனுபவங்கள் கிடைத்ததாகவும் படத்துக்கு பின்னணி இசையமைத்த சாம்.சி.எஸ் நெகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக சாம் சி.எஸ் தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “புஷ்பா 2 உடனான எனது பயணம் மிகப்பெரியது. பின்னணி இசைக்காக என்னை தேர்ந்தெடுத்து இந்த அற்புதமான வாய்ப்பை கொடுத்த தயாரிப்பு நிறுவனத்துக்கு மிகப்பெரிய நன்றி. உங்கள் ஆதரவு இல்லாவிட்டால் இது நடந்திருக்காது.
என்னுடன் கனிவாக நடந்து கொண்ட அல்லு அர்ஜுனுக்கு நன்றி. உங்களுக்காக பின்னணி இசை அமைத்தது எனக்கு புதிய அனுபவமாக இருந்தது. இயக்குநர் சுகுமாருடனான இந்த பயணம் மிகவும் சிறப்பாக அமைந்தது. குறிப்பாக சண்டைக்காட்சி மற்றும் க்ளைமாக்ஸ் காட்சியில் உடன் பணிபுரிந்தது வித்தியாசமான அனுபவத்தை கொடுத்தது. நன்றி” என பதிவிட்டுள்ளார்.
சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா, ஃபஹத் பாசில் உள்ளிட்டோர் நடித்துள்ள திரைப்படம் ‘புஷ்பா 2’. இந்தப் படத்துக்கு தேவிஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார். மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் படத்தை தயாரித்துள்ளது. தேவிஸ்ரீ பிரசாத் உடனான மோதல் காரணமாக தயாரிப்பு நிறுவனம் பின்னணி இசைக்கு சாம்.சி.எஸை தேர்வு செய்ததாக கூறப்படுகிறது. படம் டிசம்பர் 5-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.
            













