யு-19 ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் லீக் ஆட்டத்தில் ஜப்பான் அணியை 211 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது இந்திய அணி.
ஷார்ஜாவில் நேற்று நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதலில் பேட் செய்த யு-19 இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 6 விக்கெட்கள் இழப்புக்கு 339 ரன்கள் குவித்தது. கேப்டன் முகமது அமான் 118 பந்துகளில், 7 பவுண்டரிகளுடன் 122 ரன்கள் விளாசி கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். தொடக்க வீரரான ஆயுஷ் மகத்ரே 29 பந்துகளில், 4 சிக்ஸர்கள், 6 பவுண்டரிகளுடன் 54 ரன்களும், கே.பி.கார்த்திக்கேயா 49 பந்துகளில், ஒரு சிக்ஸர், 5 பவுண்டரிகளுடன் 57 ரன்களும் சேர்த்தனர்.
ஜப்பான் அணி தரப்பில் பந்துவீச்சில் கீஃபர் யமமோட்டோ லேக், ஹியூகோ கெல்லி ஆகியோர் தலா 2 விக்கெட்களை வீழ்த்தினர். 340 ரன்கள் இலக்குடன் பேட் செய்த ஜப்பான் அணியால் 50 ஓவர்களில் 8 விக்கெட்கள் இழப்புக்கு 128 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. அதிகபட்சமாக ஹியூகோ கெல்லி 111 பந்துகளை சந்தித்து 6 பவுண்டரிகளுடன் 50 ரன்களும், சார்லஸ் ஹின்ஸி 35 ரன்களும் எடுத்தனர்.
இந்திய அணி சார்பில் சேத்தன் சர்மா, ஹர்திக் ராஜ், கே.பி.கார்த்திகேயா ஆகியோர் தலா 2 விக்கெட்களை வீழ்த்தினர். 211 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இந்திய அணிக்கு இது முதல் வெற்றியாக அமைந்தது. ‘ஏ’ பிரிவில் இடம் பெற்றுள்ள இந்திய அணி தனது முதல் ஆட்டத்தில் 43 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தானிடம் தோல்வி அடைந்திருந்தது. தனது கடைசி லீக் ஆட்டத்தில் இந்திய அணி நாளை (4-ம் தேதி) ஐக்கிய அரபு அமீரகத்தை சந்திக்கிறது. 8 அணிகள் கலந்து கொண்டுள்ள இந்த தொடரில் லீக் சுற்றின் முடிவில் இரு பிரிவிலும் முதல் 2 இடங்களை பிடிக்கும் தலா 2 அணிகள் அரை இறுதி சுற்றுக்கு முன்னேறும். அரை இறுதி ஆட்டங்கள் வரும் 6-ம் தேதியும், இறுதிப் போட்டி 8-ம் தேதியும் நடைபெறுகின்றன.














