அரசியல் சட்டம் தொடர்பான விவாதம்: எதிர்க்கட்சிகள் கோரிக்கையை ஏற்றார் சபாநாயகர்

0
156

அதானி மீதான லஞ்ச வழக்கு உட்பட பல்வேறு விஷயங்கள் குறித்து விவாதிக்கக் கோரி எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்தை முடக்கி வருகின்றன. இந்த பிரச்சினைக்கு தீர்வு காணும் வகையில் பல்வேறு கட்சிகளின் அவைத் தலைவர்களுடன் சபாநாயகர் ஓம் பிர்லா நேற்று ஆலோசனை நடத்தினார்.

இக்கூட்டத்தில் கவுரல் கோகோய் (காங்கிரஸ்), டி.ஆர்.பாலு (திமுக), சுப்ரியா சுலே (தேசியவாத காங்கிரஸ்), தர்மேந்திர யாதவ் (சமாஜ்வாதி கட்சி), கல்யாண் பானர்ஜி (திரிணமூல் காங்கிரஸ்), அபே குஷ்வாகா (ராஷ்ட்ரிய ஜனதா தளம்), ஸ்ரீகிருஷ்ண தேவராயலு (தெலுங்கு தேசம் கட்சி), திலேஷ்வர் காமைத் (ஐக்கிய ஜனதா தளம்), அர்விந்த சாவந்த் (சிவ சேனா -உத்தவ்), கே.ராதாகிருஷ்ணன் (மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்) உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

கூட்டத்துக்கு பின்னர் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு செய்தியாளர்களிடம் கூறியதாவது: பல நாட்களாக நாடாளுமன்றம் செயல்படாதது சரியல்ல என்று நாங்கள் கூறினோம். இதை அனைவரும் ஏற்றுக்கொண்டனர்.

யாராவது ஒரு பிரச்சினையை எழுப்ப விரும்பினால், அதற்கென விதி உள்ளது, அதற்கு நோட்டீஸ் சமர்ப்பிக்கலாம். ஆனால் நாடாளுமன்றத்தில் அமளியை ஏற்படுத்தி, செயல்பட விடாமல் தடுப்பது நல்லதல்ல என்று சபாநாயகர் கூறினார். இதை அனைவரும் ஏற்றுக் கொண்டனர்.

அரசியல் நிர்ணய சபையால் அரசியலமைப்பு சட்டம் ஏற்றுக் கொள்ளப்பட்டு 75 ஆண்டு நிறைவு பெற்றுள்ளதை முன்னிட்டு 2 அவைகளிலும் எதிர்க்கட்சிகள் விவாதத்திற்கு அழைப்பு விடுத்தன. மக்களவையில் டிச. 13, 14, மாநிலங்களவையில் 16,17 ஆகிய தேதிகளில் இதன் மீது விவாதங்கள் நடைபெறும்.

இரு அவைகளும் செவ்வாய்க்கிழமை (இன்று) முதல் சுமூகமாக நடைபெறும் என நம்புகிறோம். இவ்வாறு கிரண் ரிஜிஜு கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here