அருமனை அருகே பத்துகாணி மலையோர பகுதிகளில் சமீபகாலமாக யானைகள், வனவிலங்குகள் நடமாட்டம் அதிகரித்து வருகிறது.
இந்த நிலையில் பத்துகாணி சிஎஸ்ஐ ஆலயத்தின் பின்பகுதியில் உள்ள தென்னை தோப்புக்குள் நேற்று முன்தினம் இரவு குட்டிகளுடன் தாய் யானை வந்துள்ளது. பின்னர் யானைகள் பட்டா நிலத்திலிருந்து தென்னை, கமுகு, இலவு மரங்களை முறித்து சேதப்படுத்தி அட்டகாசத்தில் ஈடுபட்டு சென்றுள்ளன. நேற்று காலையில் மரங்கள் முறிந்து கிடப்பதை கண்ட அப்பகுதி மக்கள் இது குறித்து கிராம அலுவலர் மாணிக்கவேலிடம் மற்றும் அதிகாரிகளிடம் சேத விவரங்களை தெரிவித்து, அவர்கள் சேத இடத்தை பார்வையிட்டனர்.
இந்த நிலையில் நேற்று இரவு (1-ம் தேதி) மீண்டும் அதே பகுதிக்கு சில யானைகள் கூட்டமாக வந்தன. யானைகளின் நடமாட்டத்தால் கிராம மக்கள் அச்சமடைந்துள்ளனர். மேலும் கிராமத்துக்குள் வரும் யானைகளை அடர்ந்த வனப் பகுதிக்குள் விரட்ட வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.