இந்திய வராலாற்றைப் புரட்டிப்போட்ட புரட்சியாளர் வி.பி.சிங் என அவரது 16-வது ஆண்டு நினைவு தினத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் புகழாரம் சூட்டியுள்ளார்.
முன்னாள் பிரதமர், வி.பி.சிங் கடந்த 2008-ம் ஆண்டு நவ.27ம் தேதி மறைந்தார். அவரது 16 வது ஆண்டு நினைவு தினம் நேற்று அனுசரிக்கப்பட்டது. நினைவு தினத்தை முன்னிட்டு, முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் தங்களின் கருத்துக்களை பகிர்ந்துள்ளனர்.
முதல்வர் மு.க.ஸ்டாலின்: இந்திய வரலாற்றைப் புரட்டிபோட்ட புரட்சியாளர்,சமூகநீதிக் காவலர் வி.பி.சிங்கின் புகழ் ஓங்குக. உயர்கல்வியிலும், வேலைவாய்ப்புகளிலும், தலைமைப் பொறுப்புகளிலும் நமது திறமையால் சாதனை படைத்து அவருக்கு நன்றி செலுத்துவோம். சாதிக்கப் பிறந்தவர்களுக்குச் சாதி தடையில்லை என்பதை நிறுவுவோம்.
துணைமுதல்வர் உதயநிதி ஸ்டாலின்: சமூகநீதிக் காவலர், முன்னாள் பிரதமர் வி.பி.சிங் நினைவு நாள் இன்று. அரசக்குடும்பத்தில் பிறந்து இருந்தாலும், அடித்தட்டு மக்களுக்காக சிந்தித்தவர். சமூகநீதியை விட பிரதமர் பதவி பெரிதல்ல என்று துணிந்து, மண்டல் அறிக்கைக்கு உயிர் கொடுத்தவர். அவரது புகழ் என்றும் நம் நெஞ்சங்களில் வாழும்.
திமுக நாடாளுமன்ற குழுத் தலைவர் கனிமொழி: சமூகநீதிப் பாதையில் இந்தியாவை வழிநடத்தியவர்களில் ஒருவர், மு.கருணாநிதியின் உற்ற நண்பர், சமூகநீதிக் காவலர் வி.பி. சிங் நினைவு நாள் இன்று. சமூகநீதிக்கான அவரது பயணமும், முன்னெடுப்புகளும் என்றென்றும் போற்றப்படும்.
பாமக நிறுவனர் ராமதாஸ்: இந்தியாவில் 40 ஆண்டுகளுக்கு மேலாக மறுக்கப்பட்டு வந்த பிற பிற்படுத்தப்பட்ட மக்களுக்கான சமூகநீதியை வழங்கிய சமூகநீதிக் காவலர் வி.பி.சிங்கின் நினைவு நாள் இன்று. அனைவருக்கும், அனைத்து நிலைகளிலும் சமூகநீதி வழங்கப்பட வேண்டும் என்பது தான் அவரது விருப்பம். அதை நிறைவேற்ற இந்த நாளில் உறுதியேற்போம்.
விசிக தலைவர் திருமாவளவன்: இந்தியப் பேரரசின் ஆட்சியதிகாரம் என்னும் பேரதிகாரத்தை சங்பரிவார்களின் மேலாதிக்கத்துக்குப் பலிகொடுத்து மண்டல் பரிந்துரையை நிறைவேற்றிச் சமூகநீதியைப் பாதுகாத்த மாமனிதர் வி.பி.சிங்கின் தியாகம் வெல்லும், ஜனநாயகம் நிலைபெறும்.
பாமக தலைவர் அன்புமணி: இந்தியாவில் பிற பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு இட ஒதுக்கீடு வழங்குவதற்கான மண்டல் ஆணையத்தின் பரிந்துரைகளை செயல்படுத்தி, சமூகநீதி வழங்கிய தலைவர் வி.பி.சிங் நினைவு நாள் இன்று. நாடு முழுவதும் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும், அதனடிப்படையில் முழுமையான இடஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும் என்பது தான் அவரது கனவு. அந்தக் கனவை நனவாக்கி, முழுமையான சமூகநீதி இலக்கை எட்ட உறுதியேற்போம். இவ்வாறு அவர்கள் தெரிவித்துள்ளனர்.













