இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தில், மாதவரம் – சிறுசேரி சிப்காட் வரையிலான 3-வது வழித்தடத்தில் ஒரு பகுதியாக, அயனாவரத்தில் இருந்து பெரம்பூர் நோக்கி “கல்வராயன்” இயந்திரம் சுரங்கம் தோண்டும் பணியில் ஈடுபட்டுள்ளது. இந்த இயந்திரம், வரும் ஜனவரி இறுதியில் இலக்கை அடையும் என்று சென்னை மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
28 சுரங்க ரயில் நிலையங்கள் சென்னையில் இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டம், 116.1 கி.மீ. தொலைவுக்கு 3 வழித்தடங்களில் செயல்படுத்தப்படுகிறது. இவற்றில் மாதவரம் – சிறுசேரி சிப்காட் வரையிலான (45.4 கி.மீ.) 3-வது வழித்தடம் ஒன்றாகும். இதில் 28 சுரங்க மெட்ரோ ரயில் நிலையங்களும், 19 உயர்மட்ட மெட்ரோ நிலையங்களும் இடம் பெற உள்ளன.
இந்த வழித்தடத்தில் அயனாவரம், சேத்துப்பட்டு, ராயப்பேட்டை, அடையாறு உட்பட பல்வேறு இடங்களில் சுரங்கப்பாதை பணிகள் நடைபெற்று வருகின்றன. இவற்றில் ஒரு பகுதியாக, அயனாவரம் – பெரம்பூர் நோக்கி மெட்ரோ ரயில் சுரங்கப்பாதை பணிகள் நடைபெற்று வருகின்றன. வரும் ஜனவரியில் கல்வராயன் சுரங்கம் தோண்டும் இயந்திரம், பெரம்பூர் மெட்ரோ ரயில் நிலையத்தை அடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
2-வது சுரங்கம் தோண்டும் பணி இதுகுறித்து சென்னை மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் கூறியதாவது: அயனாவரம் – பெரம்பூர் வரையிலான மெட்ரோ ரயில் சுரங்கப்பாதை பணியில், `கல்வராயன்’ சுரங்கம் தோண்டும் இயந்திரம் தற்போது வரை 866 மீட்டர் சுரங்கம் தோண்டியுள்ளது. பெரம்பூர் ரயில் நிலைய கட்டுமானத்தின் ஒரு பகுதி அமைக்கும் பணி நடைபெறுகிறது.
இப்பணி முடிந்தபிறகு, `கல்வராயன்’ இயந்திரம் வரும் ஜனவரி மாத இறுதிக்குள் பெரம்பூர் நிலையத்தை அடையும். முதல் சுரங்கம் தோண்டும் இயந்திரம் ‘கல்வராயன்’ பெரம்பூர் மெட்ரோ ரயில் நிலையத்தை அடைந்த பிறகு, இரண்டாவது சுரங்கம் தோண்டும் ‘மேலகிரி’ வேகமெடுக்கும்.
பெரம்பூரில் உள்ள புறநகர் ரயில் பாதையின் கீழ் சுரங்கம்பாதை அமைக்கும் பணியில் `கல்வராயன்’ இயந்திரம் ஈடுபடுத்தப்படும். தெற்கு ரயில்வே விதித்துள்ள கட்டுப்பாடுகளின்படி, இப்பணி நடைபெறும்.இந்த பகுதியில் சுரங்கப்பாதை அமைக்கும் போது, தீவிரமாக கண்காணிக்கப்படும். இவ்வாறு சென்னை மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் தெரிவித்தனர்.













