‘இன்னர் லைன் பர்மிட்’ வழக்கு: மணிப்பூர் அரசு பதில் அளிக்க அவகாசம் வழங்கியது உச்ச நீதிமன்றம்

0
174

மணிப்பூரில் அமலில் இருக்கும் ‘இன்னர் லைன் பெர்மிட்’ (ஐஎல்பி) முறைக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் அம்மாநில அரசு பதில் அளிக்க உச்ச நீதிமன்றம் 8 வார கால அவகாசம் அளித்துள்ளது.

அருணாச்சல பிரதேசம், நாகாலாந்து, மிசோரம் ஆகிய மாநிலங்களை தொடர்ந்து ஐஎல்பி அமலில் இருக்கும் நான்காவது மாநிலம் மணிப்பூர் ஆகும். இந்த மாநிலங்களுக்கு செல்ல நாட்டின் பிற மாநிலங்களை சேர்ந்தவர்கள் உட்பட வெளியாட்கள் அனுமதி பெற வேண்டும்.

இந்நிலையில் ஐஎல்பி முறைக்கு எதிராக ‘அம்ரா பங்காலி’ என்ற அமைப்பு உச்ச நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்தது. அந்த மனுவில், “மணிப்பூரின் நிரந்தரமாக வசிக்காதவர்கள் அம்மாநிலத்திற்குள் நுழைவதையும் வெளியேறுவதையும் கட்டுப்படுத்த மணிப்பூர் அரசுக்கு கட்டுப்பாடற்ற அதிகாரத்தை ஐஎல்பி வழங்குகிறது. இன்னர் லைனுக்கு அப்பால் உள்ள பகுதிகளின் சமூக ஒருங்கிணைப்பு, மேம்பாடு மற்றும் தொழில்நுட்ப முன்னேற்றம் தொடர்பான கொள்கைகளை ஐஎல்பி அடிப்படையில் எதிர்க்கிறது. இப்பகுதிகளுக்கு வருவாய் ஈட்டுவதற்கான முக்கிய ஆதாரமாக சுற்றுலா உள்ளது. ஆனால் மணிப்பூரில் சுற்றுலா வளர்ச்சிக்கு ஐஎல்பி தடையாக உள்ளது” என்று கூறப்பட்டிருந்தது.

இந்த மனுவுக்கு பதில் அளிக்குமாறு மணிப்பூர் மற்றும் மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் கடந்த 2022 ஜனவரியில் உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில் இந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் ரிஷிகேஷ் ராய், எஸ்.வி.என்.பாட்டி ஆகியோர் அடங்கிய அமர்வு முன் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுவுக்கு பதில் அளிக்க மணிப்பூர் அரசின் வழக்கறிஞர் கால அவகாசம் கோரினார். இதையடுத்து மணிப்பூர் அரசுக்கு நீபதிகள் 8 வார கால அவகாசம் வழங்கி உத்தரவிட்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here