பஞ்சாப் மாநிலம் கிதர்பஹா சட்டப்பேரவைத் தொகுதியில் இன்று இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இரு தினங்களுக்கு முன்பு இந்த தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளருக்கு ஆதரவாக முன்னாள் முதல்வரும் ஜலந்தர் மக்களவை தொகுதி எம்.பி.யுமான சரண்ஜித் சிங் சன்னி பிரச்சாரம் மேற்கொண்டார்.
அப்போது, பெண்கள் மற்றும் இரு சமுதாயத்தினர் குறித்து இழிவாக கருத்து தெரிவித்துள்ளார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவியது. இதையடுத்து, மகளிர் அமைப்பினரும் ஆம் ஆத்மி, பாஜக உள்ளிட்ட எதிர்க்கட்சியினரும் சன்னிக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். குறிப்பாக இந்த விவகாரம் குறித்து 24 மணி நேரத்தில் பதில் அளிக்குமாறு சன்னிக்கு மாநில மகளிர் ஆணையம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது.
இதுகுறித்து பாஜக மாநில மகளிர் அணி தலைவர் ஜெய் இந்தர் கவுர் கூறும்போது, “பெண்கள் மீதான சன்னியின் கருத்து அவருடைய கீழ்த்தரமான மனநிலையை பிரதிபலிப்பதாக உள்ளது” என்றார்.
இதுகுறித்து ஆம் ஆத்மி அமைச்சர் அமன் அரோரா கூறும்போது, “முதல்வர் பதவியை வகித்த ஒருவர் அரசியல் எதிரிகளை விமர்சிப்பதற்காக கொச்சையான வார்த்தையை பயன்படுத்தியதை ஏற்க முடியாது” என்றார்.
இதையடுத்து, சரண்ஜித் சிங் சன்னி செய்தியாளர்களிடம் நேற்று கூறும்போது, “என்னுடைய கருத்து யாருடைய மனதையாவது புண்படுத்தி இருந்தால் அவர்களிடம் இருகரம் கூப்பி மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்” என்றார்.