அருமனை அருகே பத்துகணி பகுதியில் அரசு பழங்குடியினர் உண்டு உறைவிட மேல்நிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளி மலைப்பகுதியை ஒட்டி அமைந்துள்ளது. நேற்று முன்தினம் (நவம்பர் 13) இரவு பள்ளியில் புலி நடமாடியதற்கான அறிகுறிகள் தெரிந்தன. நள்ளிரவில் பயங்கரமான சத்தம் கேட்டதாகவும், பள்ளி வளாகத்தில் சுற்றித்திரிந்த இரண்டு நாய்களை மர்ம விலங்கு கவர்ந்துசென்றதாகவும் அப்பகுதி வாசிகள் கூறியுள்ளனர். மேலும் பள்ளி வளாகத்தில் புலியின் கால் தடங்கள் கண்டுபிடிக்கப்பட்ட சம்பவம் மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதுதொடர்பாக அந்த பள்ளியின் தலைமை ஆசிரியர் வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தார். இதைத் தொடர்ந்து வனத்துறை அதிகாரிகள் நேற்று(நவம்பர் 14) வந்து ஆய்வு செய்து, அங்கிருந்த கால் தடங்கள், காட்டுப்பூனை கால்தடம் போன்று இருந்தன என தெரிவித்தனர். ஆனால் காட்டுப்பூனைகள் நாய்களை பிடித்து இழுத்துச் செல்லுமா என்பது கேள்விக்குறியாக உள்ளது. இருப்பினும் பள்ளியைச் சுற்றிலும் வனத்துறையினர் நேற்று (14-ம் தேதி) சிசிடிவி கேமராக்களை பொருத்தி கண்காணித்து வருகின்றனர்.














