சென்னை தாம்பரம் பகுதியில் வசித்து வருபவர் டாக்டர் லதா ஜானகி (64). இவர் நேற்று(நவம்பர் 14) காலை அனந்தபுரி எக்ஸ்பிரஸ் ரயிலில் சென்னையிலிருந்து திருநெல்வேலி வந்தார். ரயிலில் இருந்து இறங்கும்போது அவர் தனது கைப்பையை எடுக்க மறந்து விட்டார். இது பற்றி உடனடியாக அவர் ரயில்வே அவசர உதவி எண்ணில் போலீசருக்கு தெரிவித்துள்ளார்.
தவறவிட்ட கைப்பையில் சுமார் ஏழு பவுன் மதிப்புள்ள இரு தங்கச் சங்கிலிகள், 2 கிராம் தங்க நாணயம், செல்போன், ரொக்கமாக 25 ஆயிரத்து 714 ரூபாய், ஏடிஎம் கார்டு, ஐடி கார்டு ஆகியவை இருந்ததாகவும் தெரிவித்தார். இதனை தொடர்ந்து ரயில்வே போலீசார் சம்பந்தப்பட்ட ரயிலில் இருந்த டிடிஆர் மற்றும் போலீசாருக்கு தகவல் தெரிவித்த போது ரயில் குமரி மாவட்டம் குழித்துறை நெருங்கி இருந்தது.
ரயிலில் பணியில் இருந்தவர்கள் உடனே லதா ஜானகி பயணித்த கோச்சில் இருந்து அவரது கைப்பையை மீட்டு குழித்துறை ரயில் நிலையத்தில் உள்ள ரயில்வே காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். இது குறித்து லதாவுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதை அடுத்து அவர் நேற்று குழித்துறை ரயில் நிலையம் வந்தார். அவரது கைப்பை ஒப்படைக்கப்பட்டது.