தலைநகர் டெல்லியில் உரிமம் இன்றி துப்பாக்கி வைத்திருத்தல், திருட்டு, சட்டவிரோத மதுபானம், போதைப் பொருள் பயன்பாடு உள்ளிட்ட குற்றச் செயல்களில் ஈடுபடுவோருக்கு எதிராக ‘ஆபரேஷன் கவச்’ என்ற பெயரில் டெல்லி போலீஸார் 24 மணி நேர சோதனை நடத்தினர். டெல்லியில் 874 இடங்களில் நவம்பர் 12 முதல் 13 வரை டெல்லி போலீஸார் இந்த நடவடிக்கையை மேற்கொண்டனர். இதில் 1,224 பேர் சிக்கினர். இவர்களில் 700-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.
கிரிமினல்கள் மற்றும் போதைப் பொருள் கடத்தல்காரர்களுக்கு எதிராக டெல்லி போலீஸார் அவ்வப்போது இந்த நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். காவல்துறையின் சிறப்பு பிரிவு மற்றும் குற்றப் பிரிவுடன் இணைந்து உள்ளூர் போலீஸார் இந்த சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.














