நண்டு பிடிக்க மனைவியுடன் சென்றவர் அடையாறு ஆற்றின் நடுவே சிக்கிக் கொண்டார். அவரை தீயணைப்பு படையினர் மற்றும் மெரினா மீட்பு குழுவினர் படகு மூலம் மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர்.
விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஆதிகேசவன் (48). இவர் அவரது மனைவி செல்வி மற்றும் மகனுடன் கடந்த 2 ஆண்டுகளாக அடையாறு பகுதியில் தங்கி கட்டுமான பணியில் ஈடுபட்டுள்ளார். வேலை இல்லாத நேரத்தில் குடும்பத்துடன் பட்டினப்பாக்கம் அருகே உள்ள அடையாறு முகத்துவாரத்தில் நண்டு மற்றும் மீன்பிடிப்பதை வழக்கமாக கொண்டுள்ளார்.
அதன்படி, நேற்று முன்தினம் மாலை ஆதிகேசவன் தனது மனைவி செல்வியுடன் அடையாறு முகத்துவாரத்தில் நண்டு பிடிக்க மார்பளவு தண்ணீரில் இறங்கி உள்ளார். நண்டு பிடித்து கொண்டிருந்தபோது, மழையும் பெய்ததால் அடையாறு ஆற்றில் திடீரென தண்ணீர் அதிகமாக பெருக்கெடுத்துள்ளது.
இதனால், முகத்துவாரத்தின் இடையில் கணவன், மனைவி சிக்கினர். பின்னர் ஒரு வழியாக அங்குள்ள மணல் திட்டில் ஏறிக்கொண்டு உயிர் தப்பினர். ஆனால், தண்ணீரின் வேகம் அதிகமாக இருந்ததால் அவர்களால் வெளியே நீந்தி வரமுடியவில்லை.
நீண்ட நேரமாகியும் வீடு திரும்பாததால் பெற்றோரை தேடிய மகன், அடையாறு ஆற்றுக்குச் சென்று ஆற்றில் நீந்தி பெற்றோரை மீட்க முயன்றபோது அவரும் சிக்கிக் கொண்டுள்ளார். சுமார் 4 மணி நேரமாக 3 பேரும் சிக்கி தவித்துள்ளனர். இதுகுறித்து மீனவர்கள் அளித்த தகவலின்பேரில் திருவான்மியூர் தீயணைப்பு படை வீரர்கள் மற்றும் மெரினா மீட்பு குழுவினர் படகு மூலம் விரைந்து சென்று தண்ணீருக்கு இடையில் சிக்கி தவித்த 3 பேரையும் பத்திரமாக மீட்டு கரைக்கு அழைத்து வந்தனர்.