மகாராஷ்டிர முன்னாள் அமைச்சர் பாபா சித்திக் கொலை வழக்கில், தேடப்பட்டு வந்த முக்கிய குற்றவாளி ஷிவ குமார் கவுதம் கைது செய்யப்பட்டுள்ளார். குடும்ப கஷ்டத்துக்காக கூலிப்படை நபராகஅவர் மாறியது தெரியவந்து உள்ளது.
மகாராஷ்டிராவின் மும்பையில், முன்னாள் அமைச்சர் பாபா சித்திக் கடந்த மாதம் 12-ம் தேதி சுட்டுக் கொல்லப்பட்டார். இந்த வழக்கில் தேடப்பட்டு வந்த ஷிவ குமார் கவுதமை, போலீஸார் அண்மையில் கைது செய்தனர்.
போலீஸார் முதல்கட்டமாக கவுதமிடம் நடத்திய விசாரணயில், சில நாள்கள் மும்பையில் தங்கியிருந்து சித்திக்கின் நடமாட்டத்தை கவனித்து வந்ததாகவும், கடந்த அக்டோபர் 12-ம் தேதி இரவு அவரைக் கொல்ல சரியான சந்தர்ப்பம் கிடைத்ததும், சுட்டுக் கொன்றதாகவும் கூறியிருப்பதாகத் தகவல்கள் தெரி விக்கின்றன.
சிறையில் இருக்கும் லாரன்ஸ் பிஷ்னோய் கும்பலுடன் தனக்கு இருக்கும் தொடர்பை கௌதம் ஒப்புக்கொண்டிருப்பதாகவும், லாரன்ஸ் தம்பி அன்மோல் பிஷ்னோய் உத்தரவின் பேரிலேயே சித்திக்கை கொலை செய்ததாகவும் அவர் ஒப்புக்கொண்டதாகக் கூறப்படுகிறது.
இதுதொடர்பாக போலீஸ் வட்டாரங்கள் கூறியதாவது: 22 வயதாகும் ஷிவ குமார் கவுதம், பழையப் பொருட்களை வாங்கி விற்கும் வியாபாரம் செய்து வந்தார். இவர் மீது இதற்கு முன்பு உத்தரபிரதேசத்தில் எந்த வழக்கும் பதிவாகவில்லை.
விரைவாக பணம் சம்பாதிப் பதற்காகவும், குடும்ப கஷ்டத்தைப் போக்குவதற்காகவும் மட்டுமே அவர் கூலிப்படை நபராக மாறியுள்ளார். தன்னுடைய 7, 11 வயதுள்ள 2 தம்பிகளின் படிப்புக்காகவும், தனது 15, 16 வயதுள்ள 2 தங்கைகளின் திருமணச் செலவுக்காகவும் அவர் அதிக பணம் சம்பாதிக்க நினைத்துள்ளார். இதைத் தொடர்ந்தே அவர் கூலிப்படையில் சேர்ந்துள்ளார். இவ்வாறு அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.