காவல் ஆணையர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்திய திருநங்கைகளால் அப்பகுதியில் நேற்று திடீர் பரபரப்பு ஏற்பட்டது. சென்னை பரங்கிமலை பகுதியைச் சேர்ந்தவர் மந்த்ரா.
திருநங்கையான இவர், சமூக ஊடகங்களில் திருநங்கை தலைவிகளின் செயல்பாடுகளை விமர்சனம் செய்து வருகிறார். இந்நிலையில் அவரை கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி, வேப்பேரியில் உள்ள சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தை நேற்று 200-க்கும் மேற்பட்ட திருநங்கைகள் ஒரே நேரத்தில் திரண்டு முற்றுகையிட்டனர்.
தகவல் அறிந்த வேப்பேரி காவல் நிலைய போலீஸார் சம்பவ இடம் விரைந்தனர். மேலும், கூடுதல் போலீஸாரும் வரவழைக்கப்பட்டனர். காவல் ஆணையர் அலுவலக 3-வது நுழைவு வாயில் மூடப்பட்டது. பின்னர், போராட்டத்தில் ஈடுபட்ட திருநங்கைகளிடம் போலீஸார் பேச்சுவார்த்தை நடத்தினர். புகார் அளித்தால் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர்.
இதையடுத்து, போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் சாலையோரம் சென்றனர். பின்னர், தேசிய திருநங்கைகள் கூட்டமைப்பு தலைவியான திருநங்கை ஜீவாவிடம் இருந்து புகார் மனுவை போலீஸார் பெற்றுக் கொண்டனர்.
அந்த புகார் மனுவில், “திருநங்கை மந்த்ரா சமூக ஊடகங்களில் எங்களது சமூக மக்களைப் பற்றி அவதூறான செய்திகளைப் பரப்பி, இழிவுப்படுத்தும் செயல்களை தொடர்ந்து செய்து வருகிறார். இதன்மூலம் சமூகத்தில் எங்கள் மீதான கண்ணோட்டம் தவறாக பதிவாகிறது. இதனால் மூத்த திருநங்கைகள் மிகுந்த மன உளைச்சலுக்கு உள்ளாகி உள்ளனர். எனவே சம்பந்தப்பட்ட திருநங்கை மந்த்ராவை உடனடியாக கைது செய்ய வேண்டும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
புகார் மனு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல்துறை சார்பில் உறுதி அளித்த பின்னர், திருநங்கைகள் கலைந்து சென்றனர். இதேபோல் புகாருக்குள்ளான திருநங்கையும் குறிப்பிட்ட சில திருநங்கை மீது குற்றம்சாட்டி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.