பளுகல் அருகே ஈசவிளைகோணம் பகுதியை சேர்ந்தவர் – விஷ்ணு பிரசாத் (34). – எலக்ட்ரிஷியன். அவரது மனைவி மஞ்சு (30). இந்த தம்பதிக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர். மஞ்சு ஒரு நிறுவனத்தில் எழுத்தராக பணியாற்றி வருகிறார். தற்போது விஷ்ணு பிரசாத் மனைவி, குழந்தைகளுடன் தனது மாமியார் வீட்டில் வசித்து வந்தார்.
விஷ்ணு பிரசாத்துக்கு மது குடிக்கும் பழக்கம் உள்ளதாக கூறப்படுகிறது. இதனால் கணவன், மனைவி இடையே தகராறு ஏற்பட்டு வந்ததாக தெரிகிறது. இதையடுத்து நேற்று மாலை வேலை முடிந்து விஷ்ணு பிரசாத் வீட்டுக்கு வந்தார். பின்னர் அவர் அறைக்குள் சென்று உள்பக்கம் பூட்டி கொண்டார். இதனால் சந்தேகம் அடைந்த மாமனார், மாமியார் கதவை தட்டியும் திறக்கவில்லை.
பின்னர் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் கதவை உடைத்து கொண்டு உள்ளே சென்றபோது அங்கு விஷ்ணு பிரசாத் அறையில் உள்ள கொக்கியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இதுகுறித்து மஞ்சு பளுகல் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.