கலங்கரை விளக்கம் – பூந்தமல்லி வரையிலான 4 -வது வழித்தடத்தில் பல்வேறு இடங்களில் மெட்ரோ சுரங்கப்பணி நடைபெற்றுவரும் நிலையில், கச்சேரி சாலை அருகே எரிவாயு கசிவு காரணமாக, சுரங்கப்பாதை பணி தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சென்னையில் இரண்டாம்கட்ட மெட்ரோ ரயில் திட்டம், ரூ.63,246 கோடி மதிப்பில் 116.1 கி.மீ. தொலைவில் 3 வழித்தடங்களில் செயல்படுத்தப்படுகிறது. இதில்கலங்கரை விளக்கம் – பூந்தமல்லி வரையிலான 4-வது வழித்தடம் (26.1 கி.மீ.) ஒன்றாகும். இந்த வழித்தடத்தில் கலங்கரை விளக்கத்தில் இருந்து கோடம்பாக்கம் மேம்பாலம் வரை சுரங்கப்பாதை அமைக்கப்பட உள்ளது.
கலங்கரை விளக்கத்தில் இருந்து திருமயிலை நோக்கி இரண்டு சுரங்கம் தோண்டும் இயந்திரங்கள், சுரங்கப்பாதை அமைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றன. கலங்கரை விளக்கத்தில் இருந்து சுரங்கப்பாதை பணி தொடங்கி, கச்சேரி சாலை, திருமயிலை, பாரதிதாசன் சாலை ஆகிய மெட்ரோ ரயில் நிலையம் வழியாக போட்கிளப்பை அடையவுள்ளது.
18 மீட்டர் ஆழத்தில்… இந்நிலையில், எரிவாயு கசிவு காரணமாக, கச்சேரி சாலையில் சுரங்கப்பாதை அமைக்கும் பணி தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த வழித்தடத்தில் சுரங்கப்பாதை பணியை தனியார் ஒப்பந்த நிறுவனம் மேற்கொண்டுள்ளது.
ஒரு வாரத்துக்கு முன்பு, கச்சேரி சாலை அருகே 18 மீட்டர் ஆழத்தில் சுரங்கப்பணியின்போது, எரிவாயு கசிவு இருப்பதை அந்த இடத்தில் இருந்த ஊழியர்கள் கண்டறிந்ததாகவும், இயந்திரங்கள் உடனடியாக நிறுத்தப்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
அசம்பாவிதம் ஏற்படவில்லை: சுரங்கப்பாதையில் சிறிய அளவிலான மீத்தேன் மற்றும் கார்பன் மோனாக்சைட் வாயுவை கண்டறிந்தனர். அவற்றின் அளவுகள் 10 பிபிஎம் என அளவிடப்பட்டது. இது மிகவும் ஆபத்தானது அல்ல. தொழிலாளர்கள் பாதுகாப்பாக உள்ளனர்.வேலைஉடனடியாக தற்காலிகமாக நிறுத்தப்பட்டதால் எந்த அசம்பாவிதமும் ஏற்படவில்லை என்று மெட்ரோரயில் நிறுவன வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வாயு மண்ணிலிருந்து வந்திருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. வாயுக்களின் அளவு குறைவாக இருப்பதால், இது ஒரு சிறிய பிரச்சினையாக இருப்பினும் விசாரித்து வருகிறோம் என்றும் தெரிவித்துள்ளனர்.