லாரி மோதிய விபத்தில் இருசக்கர வாகனத்தை ஓட்டிச் சென்ற காப்பீட்டு நிறுவன பெண் அதிகாரி உயிரிழந்துள்ளார். பின்னால், அமர்ந்து பயணித்த அவரது தோழியான ஐஏஎஸ் அதிகாரியின் மனைவி காயமடைந்தார்.
சென்னை விருகம்பாக்கத்தைச் சேர்ந்தவர் சொர்ண லட்சுமி (40). காப்பீடு நிறுவனம் ஒன்றில் அதிகாரியாக இருந்தார். அவரது சிறுவயது தோழி பிரபா (42). இவர் ஐஏஎஸ் அதிகாரி ஒருவரின் மனைவியாவார். இந்நிலையில் மாதவரம் மஞ்சம்பாக்கத்தில் நடைபெற்ற பிறந்தநாள் விழாவில் பங்கேற்று விட்டு ஒரே இருசக்கர வாகனத்தில் இருவரும் வீடு திரும்பி கொண்டிருந்தனர். சொர்ண லட்சுமி இருசக்கர வாகனத்தை ஓட்டியுள்ளார்.
மாதவரம் மஞ்சம்பாக்கம் சின்ன ரவுண்டனா அருகே சென்றபோது பின்னால் வேகமாக வந்த லாரி திடீரென நிலை தடுமாறி மோதியது. இதில் சொர்ண லட்சுமி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். பிரபா படுகாயம் அடைந்து உயிருக்கு போராடினார். தகவல் அறிந்து மாதவரம் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீஸார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பிரபாவை மீட்டு சிகிச்சைக்காக ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர்.
அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.உயிரிழந்த சொர்ண லட்சுமியின் சடலம் பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. மேலும், விபத்தை ஏற்படுத்தி விட்டு தப்பி ஓடி தலைமறைவான லாரி ஓட்டுநரை போலீஸார் தேடி வருகின்றனர்.