பத்மநாதபுரம் நகராட்சி அலுவலகத்தில் வரி வசூல் மையம் உள்ளது. இந்த மையத்தில் நகராட்சி மக்கள் பல்வேறு வகை கட்டணங்களை செலுத்தி வருகின்றனர். அவர்களுக்கு கணினி மூலம் ரசீது வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கடந்த ஆறு மாதமாக வசூல் ஆகும் தொகையை அலுவலகத்தில் செலுத்துவதில் குளறுபடி இருந்தது. நகராட்சி ஆணையாளர் மகேஸ்வரி வரி வசூல் மையத்தில் தொகை குறித்து தணிக்கை செய்ய உத்தரவிட்டார். இந்த தணிக்கையின்போது சுமார் ஒன்றரை லட்சத்திற்கும் மேல் நகராட்சி அலுவலகத்திற்கோ, வங்கிக்கோ செலுத்தாமல் முறைகேடு நடந்தது தெரிய வந்தது.
இதைத் தொடர்ந்து கடந்த மூன்று வருடமாக நகராட்சி வசூல் மையத்தில் வசூல் ஆன தொகை குறித்து தணிக்கை செய்ய ஆணையாளர் உத்தரவிட்டார். அதன்பேரில் தணிக்கை மேற்கொண்டபோது சுமார் ரூ. 12 லட்சத்திற்கும் மேல் கணக்கில் வராமல் முறைகேடு செய்யப்பட்டது தெரிய வந்தது. இந்த நிலையில் காசாளர் வளர்மதியை தற்காலிகப் பணிநீக்கம் செய்து ஆணையாளர் உத்தரவிட்டுள்ளார். இந்த முறைகேட்டில் ஒருவர் மட்டும் ஈடுபட்டிருக்க முடியாது, பலருக்கும் தொடர்பு இருக்கலாம் என கூறப்படுகிறது.