இது அந்த கால ‘மாப்பிள்ளை’!

0
292

தமிழ் சினிமாவின் ஆரம்ப காலகட்டங்களில் வெற்றிகரமான இயக்குநராக வலம் வந்தவர் டி.ஆர்.ரகுநாத். அசோக் குமார் (1941), ராஜமுக்தி (1948), மாயா மச்சீந்திரா (1939) உட்பட பல படங்களை இயக்கிய ராஜா சந்திரசேகரின் தம்பி இவர்.

வேதவதி அல்லது சீதா ஜனனம் (1941), தமிழறியும் பெருமாள் (1942), மகா மாயா (1944), பிரபாவதி (1944) உட்பட பல படங்களை இயக்கியுள்ளார், டி.ஆர்.ரகுநாத். அவர் இயக்கிய வெற்றிப் படங்களில் ஒன்று, ‘மாப்பிள்ளை’.

டி.ஆர்.ராமச்சந்திரன் ஹீரோவாக நடித்த இந்தப் படத்தில் பி.கே.சரஸ்வதி நாயகி. இவர், வேலைக்காரி, இன்பவல்லி, அந்தமான் கைதி என பல படங்களில் நாயகியாக நடித்தவர். டி.கே.ராமச்சந்திரன், பி.வி.நரசிம்ம பாரதி, பி.எஸ்.வீரப்பா, எம்.என். ராஜம், எம்.லட்சுமி
பிரபா, வி.கே. ராமசாமி, கே.ஏ.தங்கவேலு, எம். சரோஜா, எம்.எஸ்.எஸ். பாக்யம், கே.லட்சுமிகாந்தம், காக்கா ராதாகிருஷ்ணன், சி.எஸ். பாண்டியன், ஆர்.பாலசுப்ரமணியம் என பலர் இந்தப் படத்தில் நடித்தனர்.

நேஷனல் புரொடக்‌ஷன்ஸ் தயாரித்த இந்தப் படத்துக்கு டி.ஆர்.பாப்பா, என்.எஸ்.பாலகிருஷ்ணன் இசை அமைத்தனர். தஞ்சை ராமையாதாஸ் பாடல்கள் எழுதினார். ஏ.ஜி.ரத்னமாலா பாடிய ‘நானொரு ரகசியம் சொல்லவா…’, ‘ராஜ குடும்பத்தில் பிறந்தோமடி’ திருச்சி லோகநாதன், ஏ.ஜி.ரத்னமாலா பாடிய ‘டோசு கொடுக்க வேணும்’, பி.லீலா குரலில் ‘கண்ணும் கருத்தா குடும்பம் நடத்த தெரியணும்’ உட்பட பாடல்கள் வரவேற்பைப் பெற்றன.

நடிகரும் எழுத்தாளருமான வி.என்.சம்பந்தம் திரைக்கதை, வசனத்தை எழுதினார். இந்தப் படத்தின் நாயகி பி.கே.சரஸ்வதியின் கணவர் இவர். தொழிலதிபர் ஆர்.பாலசுப்ரமணியத்தின் அச்சகத்தில் ஆபிஸ் பாயாக வேலை பார்க்கும் டி.ஆர். ராமச்சந்திரனுக்கு அதிர்ஷ்டம் கை கொடுக்க திடீர் பணக்காரர் ஆகிறார்.

தொழிலதிபரின் மகன் டி.கே.ராமச்சந்திரன், புதுப்பணக்காரரை அழித்து அவர் சொத்துகளை அபகரிப்பதாகச் சபதம் செய்கிறார். அது நடந்ததா இல்லையா என்று கதை செல்லும். அப்போது பிரபலமாகாத எம்.என்.ராஜம், செவிலியராக சிறிய வேடத்தில் நடித்தார். அவரும் காக்கா ராதாகிருஷ்ணனும் பாடுவதாக ‘டோசு கொடுக்க வேணும்’ பாடல் இடம்பெற்றது.

1952-ம் ஆண்டு இதே தேதியில் வெளியான இந்தப் படத்தின் தலைப்பில் ரஜினி (1989), தனுஷ் (2011) நடித்த படங்கள் வெளிவந்துள்ளன. அதன் கதைகளுக்கும் இந்தப் படத்தின் கதைக்கும் தொடர்பில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here