ஸ்ரீநகர்: அரசியல்சாசனத்தில் 370 சட்டப்பிரி வின் கீழ் ஜம்மு காஷ்மீருக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு கடந்த 2019-ம் ஆண்டு ரத்து செய்தது. இதன் மூலம் காஷ்மீரில் இந்தியர்கள் யார் வேண்டுமானாலும் சொத்து வாங்கலாம் என்ற நிலை ஏற்பட்டது.
ஜம்மு காஷ்மீருக்கு சமீபத்தில் நடந்த சட்டப்பேரவை தேர்தலில் தேசிய மாநாட்டு கட்சி வென்று ஆட்சியை கைப்பற்றியது. ஜம்மு காஷ்மீருக்கு மீண்டும் மாநில அந்தஸ்து அளிக்க கோரி அந்த கட்சி கோரிக்கை விடுத்து வந்தது.
இந்நிலையில் ஜம்மு காஷ்மீருக்கு மீண்டும் சிறப்பு அந்தஸ்தை வழங்க கோரும் தீர்மானம் ஜம்மு காஷ்மீர் சட்டப்பேரவையில் நேற்று கொண்டுவரப்பட்டது. காஷ்மீர் துணை முதல்வர் சுரேந்தர் சவுத்திரிஇந்த தீர்மானத்தை தாக்கல் செய்தார். அப்போது எதிர்க்கட்சி தலைவரும், பாஜக உறுப்பினருமான சுனில் சர்மா இதற்கு எதிர்ப்பு தெரிவித்தார். சிறப்பு அந்தஸ்து தீர்மானத்தை தாக்கல் செய்தது விதிமுறைகளுக்கு எதிரானது என்றும், இது குறித்து அவையில் விவாதிக்க கூடாது என்றும் கூறினார்.
இந்த தீர்மானத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜக எம்எல்ஏக்கள் அமளியில் ஈடுபட்டனர். காங்கிரஸ் தவிர மற்ற அரசியல் கட்சிகள் இந்த தீர்மானத்தை ஆதரித்தன. ஜம்மு காஷ்மீர் காங்கிரஸ் தலைவர்கள். தாரிக் கர்ரா, பீர்சதா முகமது சயீத் ஆகியோர் அமைதியாக இருந்தனர்.
தீர்மானத்துக்கு ஆதரவாகவும், எதிராகவும் இருதரப்பினரும் கோஷம் எழுப்பியதால் அவையில் கடும் அமளி நிலவியது. இந்த அமளிக்கு இடையே காஷ்மீருக்கு மீண்டும் சிறப்பு அந்தஸ்து கோரும்தீர்மானம் அவையில் நிறைவேற்றப்பட்டது.
அதில் கூறியிருப்பதாவது: ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்துக்கு மீண்டும் சிறப்பு அந்தஸ்து வழங்குவது தொடர்பாக காஷ்மீரின் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகளுடன் மத்திய அரசு பேச்சுவார்த்தை தொடங்க வேண்டும். ஜம்மு காஷ்மீரின் அடையாளம், கலாச்சாரம், மக்களின் உரிமைகளுக்கு பாதுகாப்பு அளிக்கும் சிறப்பு அந்தஸ்து மற்றும் அரசியல்சாசன உத்தரவாதத்தின் முக்கியத்துவத்தை இந்த சட்டப்பேரவை மீண்டும் உறுதி செய்கிறது. சிறப்பு அந்தஸ்தை மீண்டும் வழங்குவது தேசிய ஒற்றுமையையும், ஜம்மு காஷ்மீர் மக்களின் சட்டரீதியான விருப்பங்களையும் பாதுகாக்கும். இவ்வாறு அந்த தீர்மானத்தில் தெரிவிக்கப்பட்டிருந்தது.