திமுக செயற்குழு, பொதுக்குழு ஜனவரி மாதம் கூடுகிறது? – மதுரை அல்லது திருச்சியில் நடத்த ஆலோசனை

0
293

அடுத்தாண்டு ஜனவரி மாதம் பொதுக்குழு, செயற்குழு கூட்டத்தை மதுரை அல்லது திருச்சியில் நடத்த திமுக தலைமை ஆலோசித்து வருகிறது.

வரும் 2026 சட்டப்பேரவை தேர்தலுக்கான அடிப்படை கட்டமைப்புகளை வலுப்படுத்துவதில் திமுக மும்முரமாக ஈடுபட்டு வருகிறது. தேர்தலுக்கு இன்னும் 15 மாதங்கள் உள்ள நிலையில், பல மாதங்களுக்கு முன்னதாகவே, தேர்தல் ஒருங்கிணைப்பாளர் குழு நியமிக்கப்பட்டு, அக்குழுவினர் அவ்வப்போது ஆலோசனை நடத்தி, பல்வேறு வியூகங்களை வகுத்து வருகின்றனர்.

குறி்ப்பாக, கட்சியில் மாவட்ட செயலாளர்கள் எண்ணிக்கையை அதிகரித்து, அதன்மூலம் இளம் நிர்வாகிகளுக்கு பொறுப்புகளை வழங்குவது, மாவட்ட வாரியாக பணிகளை ஒருங்கிணைத்தல் உள்ளிட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதற்கிடையில், 234 தொகுதிகளுக்கும் தேர்தல் பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டு அவர்களுக்கும் பல்வேறு பணிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. சமீபத்தில் பார்வையாள்ரகளை சந்தித்த முதல்வர் மு.க.ஸ்டாலின், கடந்த முறை கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்டு, அவர்கள் தோல்வியடைந்த தொகுதிகளில் கூடுதல் கவனம் செலுத்த உத்தரவிட்டதுடன், சிறப்பாக பணியாற்றினால் தேர்தலில் சீட் கிடைக்கும் என்பதையும் சூசகமாக கூறி நிர்வாகிகளை ஊக்கப்படுத்தியுள்ளார். அத்துடன், நிர்வாகிகளிடம் 200 தொகுதிகள் என்ற இலக்கையும் வழங்கி அதற்கேற்ப பணியாற்ற அறிவுறுத்தியுள்ளார்.

இதற்கிடையில், திமுகவின் பொதுக்குழு, செயற்குழு கூட்டத்தை கூட்ட வேண்டிய அவசியம் கட்சித் தலைமைக்கு ஏற்பட்டுள்ளது. முன்னதாக, கடந்த 2022-ம் ஆண்டு அக்.9-ம் தேதி சென்னை பச்சையப்பன் கல்லூரி எதிரில் உள்ள புனித ஜார்ஜ் பள்ளி வளாகத்தில் 15-வது செயற்குழு, பொதுக்குழு கூட்டங்கள் நடத்தப்பட்டன. அதன்பின், இந்தாண்டுக்கான கூட்டம் நடத்தப்பட வேண்டியுள்ளது. தற்போது பருவமழைக் காலம் என்பதால், அடுத்தாண்டு ஜனவரி மாதம் நடத்தி விடலாம் என்று திமுக தலைமை முடிவெடுத்துள்ளது.

திமுக பொதுக்குழுவைப் பொறுத்தவரை 3,500 பேருக்கும் மேல் உறுப்பினர்கள் உள்ளனர். சென்னை அண்ணா அறிவாலயம் கலைஞர் அரங்கம் போதாது என்பதால், சென்னையை தவிர்த்து வேறு மாவட்டங்களில் நடத்தலாம் என முடிவெடுக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. இதன்படி மதுரை அல்லது திருச்சியில் நடத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருகிறது. இதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here