ஸ்டான்லி அரசு மருத்துவமனை, தனியார் பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல்

0
270

சென்னையில் ஸ்டான்லி அரசு மருத்துவமனை மற்றும் மயிலாப்பூரில் உள்ள தனியார் பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. கல்வி நிலையங்கள், வணிக நிறுவனங்கள், விமானம், ரயில், பேருந்து நிலையங்கள், வழிபாட்டுத் தலங்கள், திரையரங்குகள் உட்பட பல்வேறு பகுதிகளுக்கு புரளியை கிளப்பும் வகையில் அவ்வப்போது வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டு வருகிறது. வெளிநாட்டில் இருந்தவாறு மர்ம நபர்கள் இ-மெயில்கள் மூலம் இவ்வாறு மிரட்டி வருகின்றனர்.

அதன்படி, ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கும் நேற்று வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. தகவல் அறிந்து ராயபுரம் காவல் நிலைய போலீஸார் வெடிகுண்டு நிபுணர்கள் மற்றும் மோப்ப நாய் உதவியுடன் மருத்துவனை முழுவதும் மெட்டல் டிடெக்டர் மூலம் சோதனை நடத்தினர். முடிவில் சந்தேகத்துக்கிடமான எந்த பொருட்களும் சிக்கவில்லை. இதையடுத்து வெடிகுண்டு மிரட்டல் புரளியை கிளப்பும் வகையில் விடுக்கப்பட்டது உறுதி செய்யப்பட்டது.

இதேபோல், மயிலாப்பூர் சாந்தோமில் உள்ள தனியார் பள்ளியின் தலைமை ஆசிரியைக்கு நேற்று அதிகாலை இ-மெயில் வந்தது. அதில், அந்த பள்ளியில் வெடிகுண்டு வைக்கப்பட்டிருப்பதாகவும், அது சிறிது நேரத்தில் வெடிக்கும் எனவும் குறிப்பிடப்பட்டிருந்தது. அதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த அவர், உடனடியாக மயிலாப்பூர் போலீஸாருக்கு தகவல் தெரிவித்தார்.

மயிலாப்பூர் போலீஸார், வெடிகுண்டு கண்டறியும் நிபுணர்களுடன் அங்கு விரைந்து சென்று பல மணி நேரம் சோதனை செய்தனர். மோப்ப நாய்களும் சோதனைக்கு பயன்படுத்தப்பட்டன. பல மணி நேரம் நடைபெற்ற சோதனையில், அங்கிருந்து எந்த வெடி பொருளும் கிடைக்கவில்லை. இதுவும் புரளி என போலீஸாருக்கு தெரியவந்தது. இது தொடர்பாக போலீஸார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here