சென்னை அடுத்த கவுரிவாக்கத்தில் அமைந்துள்ள சிருங்கேரி சாரதா எக்விடாஸ் மருத்துவமனையில் குறைந்த கட்டணத்தில் புற்றுநோய்க்கான கதிர்வீச்சு சிகிச்சை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
சென்னை அடுத்த கவுரிவாக்கத்தில் தாம்பரம் – வேளச்சேரி சாலையில் சிருங்கேரி சாரதா எக்விடாஸ் மருத்துவமனை (புற்றுநோய் மற்றும் மல்டி ஸ்பெஷாலிட்டி) அமைந்துள்ளது. இந்த மருத்துவமனையில் புற்றுநோய்க்கு சிறப்பான முறையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மருத்துவமனை தொடங்கி ஓராண்டு நிறைவடைந்ததை தொடர்ந்து, சிருங்கேரி சாரதா பீடத்தின் இளைய சங்கராச்சாரியார் ஜகத்குரு ஸ்ரீ விதுசேகர பாரதி சுவாமிகள் ஆசியுடன், புற்றுநோய்க்கு கதிர்வீச்சு சிகிச்சையை மருத்துவமனை நிர்வாகம் தொடங்கியுள்ளது.
இந்த நிகழ்வில் சிறப்பு விருந்தினர்களாக ஜெம் மருத்துவமனை குழும தலைவர் மருத்துவர் சி.பழனிவேலு, டெல்லி எய்ம்ஸ் பேராசிரியர் மருத்துவர் ஜி.கே.ராத், எய்ம்ஸ் மங்களகிரி – தர்பங்கா இயக்குநரும் பேராசிரியருமான மருத்துவர் மதபானந்தா கர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
எக்விடாஸ் சிறு நிதி வங்கியின் தலைமை நிர்வாக அதிகாரி, நிர்வாக இயக்குநர் மற்றும் எக்விடாஸ் மருத்துவ அறக்கட்டளை நிர்வாக அறங்காவலரான பி.என்.வாசுதேவன் கூறுகையில், “இந்த மருத்துவமனையில் நிறுவப்பட்டுள்ள அதிநவீன லீனியர் ஆக்சிலரேட்டர், பிராக்கிதெரபி யூனிட் மூலம் புற்றுநோயாளிகளுக்கு துல்லியமான கதிர்வீச்சு சிகிச்சையை அளிக்க முடியும். அதுவும், அனைத்து தரப்பு நோயாளிகளுக்கும் குறைந்த கட்டணத்தில் உயர்தர புற்றுநோய் சிகிச்சை அளிக்கப்படுகிறது.
எக்விடாஸ் நிறுவனம் முன்னெடுத்துள்ள இந்த புதிய முயற்சியின் மூலம் மற்ற தனியார் மருத்துவமனைகளுடன் ஒப்பிடும்போது 40 முதல் 50 சதவீதம் கட்டணத்தை மட்டும் பெற்று கதிர்வீச்சு சிகிச்சை வழங்கப்படுகிறது. புற்றுநோயுடன் போராடுபவர்களுக்கு நம்பிக்கையையும், குணப்படுத்தும் சிகிச்சையையும் வழங்க நாங்கள் கடமைப்பட்டிருக்கிறோம்” என்றார்.
எக்விடாஸ் மருத்துவ அறக்கட்டளையின் தலைவரும், திட்ட இயக்குநருமான ஆர்க்காடு சரவணக்குமார் கூறுகையில், “மருத்துவமனையின் உள்கட்டமைப்பு, நிலம் மற்றும் உபகரணங்களும் நன்கொடையாக வழங்கப்பட்டுள்ளன. அதனால், செயல்பாட்டு கட்டணங்கள் மட்டுமே வாங்கப்படுகிறது. இது கதிர்வீச்சு சிகிச்சைக்கும் பொருந்தும். அனுபவம் வாய்ந்த புற்றுநோயியல் நிபுணர்கள் மூலம் நோயாளிகளுக்கு குறைந்த கட்டணத்தில் சிகிச்சைகளை வழங்க எங்கள் மருத்துவமனை உறுதிபூண்டுள்ளது” என்றார்.
மருத்துவமனையின் மருத்துவ இயக்குநர் மருத்துவர் வைத்தீஸ்வரன் வேலாயுதம் கூறுகையில், “புதிய கதிர்வீச்சு வசதியுடன், கடந்த ஆண்டில் 1,500-க்கும் மேற்பட்ட கீமோதெரபி சிகிச்சைகள் வழங்கப்பட்டுள்ளன. 500-க்கும் மேற்பட்ட அறுவை சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அனைத்து நவீன கதிர்வீச்சு சிகிச்சைகளும் வழங்கப்படும்” என்றார்.
மருத்துவமனையின் தலைமை இயக்க அதிகாரி மருத்துவர் ஸ்டீபன் மேத்யூ கூறுகையில், “இந்த மருத்துவமனை முதலமைச்சரின் மருத்துவ காப்பீட்டு திட்டம், பிரதமர் காப்பீட்டு திட்டத்தில் இணைந்துள்ளது. அனைத்து முக்கிய பொது மற்றும் தனியார் மருத்துவ காப்பீட்டாளர்கள் மூலம் பணம் செலுத்தாத சிகிச்சையும் வழங்கப்படுகிறது. புற்றுநோயாளிகள் குறைவான கட்டணத்தில் சிகிச்சையை பெற வேண்டும் என்பதே எங்களின் நோக்கம் ஆகும்” என்றார்.