நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் நவம்பர் 25-ம் தேதி தொடக்கம்

0
135

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் நவம்பர் 25-ம் தேதி தொடங்கும் என்று மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக சமூக வலைதளத்தில் அவர் நேற்று வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது: மத்திய அரசின் பரிந்துரையை ஏற்று நாடாளுமன்றத்தின் இரு அவைகளின் குளிர்கால கூட்டத் தொடரை நவம்பர் 25 -ம் தேதி முதல் டிசம்பர் 20-ம் தேதி வரை நடத்த குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளித்துள்ளார். நவம்பர் 26-ம் தேதி அரசியலமைப்பு தினம் கொண்டாடப்பட உள்ளது. அன்றைய தினம் பழைய நாடாளுமன்ற கட்டிடத்தின் மைய மண்டபத்தில் அரசியலமைப்பு தினத்தின் 75-வது ஆண்டு விழா கொண்டாடப்படும். இவ்வாறு அமைச்சர் கிரண் ரிஜிஜு தெரிவித்துள்ளார்.

குளிர்கால கூட்டத் தொடர் குறித்து மத்திய அரசு வட்டாரங்கள் கூறியதாவது: கடந்த மழைக்கால கூட்டத் தொடரில் வக்பு திருத்த மசோதா மக்களவையில் நிறைவேற்றப்பட்டது. இந்த மசோதாவுக்கு எதிர்க்கட்சிகள் கடும் ஆட்பேசம் தெரிவித்ததால் நாடாளுமன்ற கூட்டுக் குழு (ஜேபிசி) பரிசீலனைக்கு அனுப்பப்பட்டு உள்ளது. குளிர்கால கூட்டத் தொடரின்போது ஜேபிசி தனது பரிந்துரைகளை சமர்ப்பிக்கும். இதே கூட்டத் தொடரில் வக்பு திருத்த மசோதாவை நிறைவேற்ற முயற்சி மேற்கொள்ளப்படும்.

ஒரே நாடு, ஒரே தேர்தல் திட்டத்துக்கு மத்திய அமைச்சரவை ஏற்கெனவே ஒப்புதல் வழங்கி உள்ளது. இதுதொடர்பான மசோதா நாடாளுமன்றத்தில் அறிமுகம் செய்யப்படும். காஷ்மீருக்கு மாநில அந்தஸ்து வழங்க வகை செய்யும் பரிந்துரையை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும்.

லடாக் எல்லையில் இந்தியா, சீனா இடையே முக்கிய உடன்பாடு எட்டப்பட்டு உள்ளது. இதன்காரணமாக எல்லையில் 4 ஆண்டுகளாக நீடித்த பதற்றம் தணிந்திருக்கிறது. இதுதொடர்பாக மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் நாடாளுமன்றத்தில் விரிவான விளக்கம் அளிப்பார்.

குளிர்கால கூட்டத் தொடரை சுமுகமாக நடத்துவது தொடர்பாக மத்திய அரசு சார்பில் விரைவில் அனைத்து கட்சி கூட்டம் நடத்தப்படும். இதேபோல மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா சார்பில் தனியாக அனைத்து கட்சி கூட்டம் நடத்தப்படும். இவ்வாறு மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here